எய்ட்ஸ் நோயால் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் கதாநாயகியாக நடித்து அருவி படம் தயாராகி உள்ளது. திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் டெலிவிஷனில் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற பெயரில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் லட்சுமி கோபால்சாமி நடித்து இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை லட்சுமி கோபால்சாமி விளம்பரத்துக்காக கோபமூட்டி சண்டையிட வைப்பது, அழுவதற்காக கண்ணில் ‘கிளிசரின்’ பயன்படுத்துவது உள்பட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த படத்தை பார்த்தவர்கள் லட்சுமி ராமகிருஷ்ணனை நேரடியாக விமர்சித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டனர். இதற்கு பதில் அளித்து லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “அநீதிக்கு ஆளான பெண்களுக்கு உதவும் டெலிவிஷன் நிகழ்ச்சியை அருவி படத்தில் இயக்குனர் கேலி செய்துள்ளார். ஒரு பெண்ணை மையமாக வைத்து படம் எடுக்கும்போது இன்னொரு பெண்ணை அதில் அவதூறாக தாக்கி இருப்பது மோசமான செயல். உயிருடன் இருக்கும் பெண்களை மதிக்காத இவர்கள் மத உணர்வுகளுக்கு எப்படி மதிப்பு கொடுப்பார்கள்?
‘ஸ்லம்டாக்’ படம் பிரபல டிவி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தில் அமிதாப்பச்சனை தொடர்புப்படுத்தி விமர்சிக்கவில்லை. இங்கு இயக்குனரின் கற்பனை உண்மை என்று முட்டாள்தனமாக நம்பப்படுகிறது.
இயக்குனருக்கு தைரியம் இருந்தால் கேமரா முன்னால் நேருக்கு நேர் என்னை சந்தித்து என் கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும். அருவி படம் அந்த இயக்குனரின் சொந்த அனுபவமாக இருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.