18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

Actors cinema news

சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே.

சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளார்.

வரும் செப்-20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள், வெப்சீரிஸ் என்ட்ரி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் டிஎஸ்கே.

“’லப்பர் பந்து’ நான் நடிக்கும் 18 ஆவது படம். ஆனாலும் இந்த படத்தில் நடித்த போது இதுதான் எனது முதல் படம் என்பது போல உணர்ந்தேன். அந்த அளவிற்கு இந்த படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அனுபவங்கள் கிடைத்தன. *இயக்குநர் தமிழரசன் நடிப்பு குறித்து மெனக்கெட்டு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்*. இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு ரியாலிட்டி ஷோவில் ஒரு டைட்டில் வின்னராக என்னை பார்த்திருப்பார்கள். பெட்ரோமாக்ஸ் படத்தில் ஒரு காமெடி நடிகராக பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் ஒரு குணச்சித்திர நடிகராக புதிய பரிமாணத்தில் என்னை பார்க்கலாம். *இதற்கு முன் ‘அடங்காதே’ படத்திலும் மற்றும் சில வெப் சீரிஸிலும் சீரியஸான ரோலில் நடித்து இருக்கிறேன். அது இந்த படத்தில் நடிக்க உதவியாக இருந்தது

இந்தப்படத்திற்காக இயக்குநரைப் பின் தொடர்ந்தது, ஏற்கனவே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டாலும் மற்றும் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படத்திற்காக ஆடிசன் வைத்தபோது அதில் கலந்துகொண்டு தேர்வானது என ‘லப்பர் பந்து’ படத்திற்குள் நுழைந்ததே ஒரு பெரிய முயற்சியால் தான் சாத்தியமானது.. அதேசமயம் எனக்கு சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட தெரியும் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது.* இப்படி ஒரு கிரிக்கெட் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற என் நீண்டநாள் ஆசையும் இந்த படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. அதே சமயம் இந்த படத்திற்காக கிரிக்கெட்டில் சில முறையான பயிற்சிகளும் எடுத்துக் கொண்டேன்.. படம் முழுவதும் வரும் விதமாக எனது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் சம்மர் வெயிலில் அதுவும் கிரிக்கெட் கிரவுண்டில் நாள் முழுவதும் படப்பிடிப்பு நடைபெற்றதால் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது..* கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படங்கள் தமிழில் அடிக்கடி வந்தாலும் கூட அவற்றிலிருந்து நிச்சயமாக இந்த படம் வித்தியாசப்பட்டு இருக்கும் கிரிக்கெட் மட்டுமே படமாக இல்லாமல் அதுவும் ஒரு பாகமாக இதில் இடம் பெற்றுள்ளது

இதில் எனது வழக்கமான காமெடி நடிப்பும் இருக்குமா என்றால் நிச்சயமாக படம் பார்க்கும்போது உங்களுக்கு அது ஒரு ட்விஸ்ட் ஆகவே இருக்கும். காளி வெங்கட், முனீஸ்காந்த், பால சரவணன் போல இந்த படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் படங்களில் எல்லாமே என்னிடமும் காமெடி, குணச்சித்திரம் என கலவையான நடிப்பை பார்க்கலாம். சிவகார்த்திகேயன் அண்ணன் ஒரு மேடையில் சொன்னது போல காமெடி நடிகர்களுக்கு சீரியஸ் நடிப்பு எளிதாக வந்துவிடும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்..

அடுத்து விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ’பாம்’ படத்திலும் இதேபோல ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் விஷால் வெங்கட்டும் என்னை ஒரு சின்னத்திரை காமெடி நடிகராக பார்க்காமல் எனக்குள்ளும் ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து நடிக்க வைத்திருக்கிறார். கட்டப்பாவ காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் இயக்கத்தில் சுந்தர்.சி நடிக்கும் ‘வல்லான்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த வகையில் இந்த வருடம் அடுத்தடுத்து நான் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றாக வெளியாக இருக்கின்றன.

இன்னொரு பக்கம் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறேன். ஏற்கனவே கனா காணும் காலங்கள் சீரிஸில் மூன்று சீசன்களாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த விதமாக இரண்டு வெப் சீரிஸ்களில் தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறேன்.

‘லப்பர் பந்து’ படம் வெளியான பிறகு நிச்சயமாக வித்தியாசமான கதாபாத்திரங்கள் உங்களைத் தேடி வரும் அதன் பிறகு கதைகளை நிதானமாக தேர்ந்தெடுத்து பண்ணுங்கள் என இதில் பணியாற்றிய டெக்னீசியன்கள் பலர் என்னிடம் கூறினார்கள். அதற்கேற்ற மாதிரி பெரிய பெரிய இயக்குநர்களிடம் பணியாற்றிய அவர்களது உதவி இயக்குநர்கள் சிலர் அடுத்ததாக தாங்கள் பண்ணும் படங்களில் நடிக்க என்னை அழைக்கிறார்கள் என்பதே உற்சாகம் தருகிறது. அந்த வகையில் ‘லப்பர் பந்து’ திரைப்படம் எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்கிறார் டி எஸ் கே.