ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பில் போருக்கு தயாராகுங்கள் என்று அவர் நிகழ்த்திய பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அவரின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அது குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் தொடர்ந்து வந்தது.
அதன் பிறகு அமைதி காத்து வந்த ரஜினி, சமீபத்தில் நடந்த சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பேசினார். அந்த பேச்சும் விவாதப் பொருளாக மாறி, தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
இது புறம் இருக்க, லதா ரஜினிகாந்த் சமீபகாலமாக குழந்தைகளுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கு ஸ்ரீதயா பவுண்டேஷன் மூலம் குரல் கொடுத்து வருகிறார். இதற்காக பாரத் யாத்ரா என்ற நடை பயணத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இன்று, ஸ்ரீதயா பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் உரிமையாளரும், ரஜினியின் மனைவியுமான லதா கலந்துக் கொண்டு பேசும் போது, ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா வகையிலும் நல்லது செய்வார். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினிகாந்தின் மனதில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும்.’ என்றார்.