எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `பாகுபலி 2′. உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம், இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது.
பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், `பாகுபலி 2′ ரிலீசாவதற்கு முன்பாகவே ரூ.438 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் படம் ரிலீசாவதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் 2 நிமிடக் காட்சி இணையதளங்களில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முன்பாக எடிட்டிங் பணியின் போது, ஒரு சில படங்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தது முதல், பல்வேறு இன்னல்களை படக்குழு சந்தித்து வருகிறது.
கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்ததால் `பாகுபலி 2′ படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருந்தது. தற்போது அந்த பிரச்சனை சீராகி உள்ள நிலையில், அடுத்ததாக தமிழக திரைப்பட விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் `பாகுபலி 2′ படத்தில் இடம்பெறும் போர் உள்ளிட்ட 2 நிமிட சண்டைக் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதன் படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.