மிஷா கோஷாலைத் திருமணம் செய்து கொண்ட ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. மாறாக தகாத வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதற்காக சமூக வலைதளங்களான பேஸ்புக், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் மற்ற பெண்களுடன் உரையாடுவது, அந்த பெண்களிடம் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வது என தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இவ்வாறு சுமூகமாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், ஒரு பெண் அவரை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறாள். இருவரும் அவர்களது சொந்த தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். மறுநாள் அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்ட தகவல்களை வைத்து மர்ம நபர் ஒருவர் ராதாகிருஷ்ணனை மிரட்டுகிறார். அந்த மர்ம நபர் வேறு யாரும் இல்லை, படத்தின் நாயகனான ஆனந்த்சாமி தான்.
ஆனந்த்சாமி தனது வாழ்க்கையை, வாய்பேச முடியாத தனது மனைவி அஷ்வதி லாலுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூக வலைதளம் பக்கமே வராத ஆனந்த் சாமியின் மனைவி சமூக வலைதளத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ள, அவளது தற்கொலைக்கான காரணத்தை அறிய தீவிரம் காட்டும் ஆனந்த் சாமி, சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கவும் முடிவு செய்கிறார்.
இவ்வாறு தேடி வரும்போது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தான் தனது மனைவி தற்கொலைக்கு காரணமானவர் என்பதை அறியும் ஆனந்த்சாமி, ஜெயப்பிரகாஷின் மனைவியை சமூக வலைதளத்தின் மூலமாக ஈடுபடுத்தி, ஜெயப்பிரகாஷிடம் தொடர்பு கொண்டு அவரை மிரட்டுகிறார்.
ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அப்படி என்ன தான் தவறு செய்தார்? அவரை எதற்காக ஆனந்த்சாமி பழிவாங்க துடிக்கிறார்? ஆனந்த்சாமி மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் நடந்தது என்ன? கடைசியில் ஜெயப்பிரகாஷ், ஆனந்த்சாமி என்ன ஆனார்கள்? என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.
ஆனந்த்சாமி தனது தத்ரூபமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவரது இயல்பான நடிப்பும், மனைவியை இழந்த அவரது ஆக்ரோஷமும் திரையில் ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் வீறு நடை போடும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சமூக வலைதளத்தாலேயே பாதிக்கப்பட்டு கதறும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் அஷ்வதி லால், மிஷா கோஷால் இருவருமே காட்சிக்கு தேவையானதை சிறப்பாக அளித்திருக்கின்றனர். ஆனந்த்சாமி மற்றும் ஜெயப்பிரகாஷே அதிகளவிலான காட்சிகளில் நடித்திருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் பேசும்படியாக இல்லை.
நடிகரும், இயக்குநருமான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் சமூக வலைதளங்களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, அதனால் அந்த குடும்பத்தினர் படும் கஷ்டங்கள், தற்கொலை என பல்வேறு கோணத்தில் தனது ஆய்வை நடத்தி இப்படத்தை இயக்கி இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில், சமூக வலைதளத்தின் போக்கு வேறு கட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைகள், தங்கும் விடுதிகள் என மக்கள் செல்லும் பொது இடங்களில் அவர்களது பாதுகாப்புக்கு விரோதமாக ரகசிய கேமாரக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து இணையதளங்களில் வெளியிடுவதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களால், அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறார்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் காட்சிகள் துல்லியமாக, புதுமையானதாக இருக்கிறது. அவர் அதை காட்சிப்படுத்தி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.