full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

மாறுவோம் மாற்றுவோம் : கமல்ஹாசன்

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை” என்ற நம்மாழ்வார் கருத்துகளைப் பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு “நானும் ஒரு விவசாயி” என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து “கின்னஸ்” சாதனை நிகழ்த்தப்பட இருக்கிறது. வரும் ஆகஸ்டு 26 ம் தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிபூர் கிராமத்தில் இச்சாதனை நிகழவிருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என 5000த்திற்கும் மேற்பட்டோர் இச்சாதனையில் பங்கு கொள்ளவுள்ளனர். இதில் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையோடு சத்யபாமா யுனிவர்சிட்டியும், டிரான்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து இவ்விழாவை நிகழ்த்த உள்ளது.

இந்த “கின்னஸ்” சாதனை நிகழ்வில் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை உறுப்பினர்களுடன் இணைந்து இச்சாதனை நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் மற்றும் லோகோவை அறிமுகப்படுத்தி வைத்த கமல்ஹாசன் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காணொளியைக் கண்டு மிகுந்த பரவசத்துடன் குழுவினரைப் பாராட்டினார். மேலும் இயற்கை விவசாயத்திற்கான கின்னஸ் சாதனை நிகழ்ச்சியின் துவக்கமாக நாட்டு விதை விதைத்து “நானும் ஒரு விவசாயி” மாறி மாறுவோம் மாற்றுவோம் என்றார். வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தன் ரசிகர்களின் நற்பணிமன்றத்தினரையும் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் குழுவினரோடு பணிபுரியவும் கட்டளையிட்டார்.

மேலும் “மாற்று விதையால் உருவாகும் செடியில் பூச்சிகள் உட்காராமல் இருக்க வேரிலே விஷம் பாய்ச்சுகிறோம். உங்களுக்கு புரியவில்லையா? நாமும் விஷம் தான் உண்கிறோமென்று! அதனால் இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளால் உருவான உணவுகளை உண்போம் என்று கூறியவர், சுமார் 70% பாரம்பரிய நாட்டு விதைகள் நம் நாட்டில் அழிந்து விட்டதாகவும் மீதமுள்ள 30% பாரம்பரிய நாட்டு விதைகளைக் காக்க ஒவ்வொருவரும் “நானும் ஒரு விவசாயியாக” மாறுவோம் மாற்றுவோம்.” என்றார்.

“நிகழ்ச்சியில் செயற்கை நிறங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வெள்ளை சர்க்கரை, மைதா போன்றவற்றை தவிர்த்து இயற்கை தானியங்களான கேழ்வரகு, கோதுமை, நாட்டு சர்க்கரையால் உருவான கேக்கை வெட்டி ஆரோக்கியமான கேக் கலாச்சாரத்தை வரவேற்போம்.” என்றார்.

மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தை கமலஹாசன் மற்றும் பாலம் கல்யாணசுந்தரம் இருவரும் தொடங்கி வைத்து அதன் கேடயத்தை வெளியிட்டார்கள் .

இயற்கை உரம் கொண்ட பையில் பாரம்பரிய நாட்டு விதைகளை தன் வீட்டு தோட்டத்தில் வளர்ப்பதாக உறுதியளித்தார்.

“நானும் ஒரு விவசாயி” விழாக் குழுவினர் கல் உப்பு, பட்டை தீட்டாத அரிசி, செக்கில் ஆட்டிய எண்ணெய், இயற்கை தானியங்கள், இயற்கையாக உருவான பழங்கள் போன்றவற்றை கமல்ஹாசனுக்கு பரிசளித்தார்கள்.

உணவு பொருட்கள் நஞ்சாக மாறிக்கொண்டிருப்பதை காட்டும் ஆவணப்படத்தின் வீடியோவை பார்வையிட்டார்.

“நானும் ஒரு விவசாயி” என்ற மோஷன் போஸ்டரை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகருமான ஆரி, சத்யபாமா யுனிவர்சிட்டியின் மக்கள் தொடர்பு வேந்தர் மரியாஜீனா ஜான்சன், ட்ரான்ஸ் இந்தியா மீடியா & எண்டர்டெயின்மண்ட் பி.லிட். உரிமையாளர் ராஜேந்திரராஜன், பாலம் கல்யாணசுந்தரம், ஈக்கோசயின்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் மற்றும் வாவ் செலிபிரேசன்ஸ் முகமது இப்ராஹிம், சமூக ஆர்வலரும் சுதா பவுண்டேசன் உரிமையாளருமான நிஷா தோடா ஆகியோர் உடன் இருந்தனர்.