ஜான்விகபூர் நடித்த படத்தில் சர்ச்சை காட்சிகள் – நீக்குமாறு விமானப்படை எழுதிய கடிதம்

News

கார்கில் போரில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் பலரை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றி பாராட்டு பெற்றவர் பெண் ராணுவ பைலட் குஞ்சன் சக்சேனா. இவருக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘குஞ்சன் சக்சேனாதி கார்கில் கேள்’ என்ற பெயரில் இந்தி படம் தயாரானது. இதில் குஞ்சன் சக்சேனா வேடத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து இருந்தார். ஷரன் சர்மா இயக்கினார். இந்த படம் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது நேரடியாக இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் இந்திய விமானபடை வற்புறுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய திரைப்பட தணிக்கை குழு, படத்தை தயாரித்துள்ள தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஓ.டி.டி தளத்துக்கு இந்திய விமானபடை எழுதி உள்ள கடிதத்தில், “இந்திய விமானப்படையின் அடுத்த தலைமுறை அதிகாரிகளை ஊக்கப்படுத்த படம் உதவும் என்று பட நிறுவனம் ஒப்புதல் அளித்தது. ஆனால் சில காட்சிகளில் இந்திய விமானப்படையில் உள்ள பெண்கள் பற்றி தவறான சாயல் உள்ளது. இந்திய விமானபடை பாலியல் பாகுபாடு இல்லாமல் ஆண், பெண் அதிகாரிகளுக்கு சம அந்தஸ்து வழங்கி வருகிறது. சர்ச்சை காட்சிகளை நீக்கும்படி பட நிறுவனத்துக்கு அறிவுறுத்தியும் அதை செய்யவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளது.