full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

முடியாத “லிங்கா” பஞ்சாயத்து.. சிக்கலில் கே.எஸ்.ரவிக்குமார்!

கதைத் திருட்டு பஞ்சாயத்து தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதியது இல்லை. பல பெரிய இயக்குநர்கள் மேல் பல உதவி இயக்குநர்களும், வாய்ப்பு தேடும் புதியவர்களும் பல முறை குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் அவையாவும் உடனுக்குடன் “கவனித்து” தீர்க்கப்பட்டு விடும். ஆனால் மூன்று வருடமாகியும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பஞ்சாயத்து முடிந்த பாடில்லை.

ரஜினிகாந்த் நடித்த‘லிங்கா’ படம், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். அதனால், ‘லிங்கா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை மதுரை நீதிமன்றம் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

ஒரு வழியாக இந்த வழக்கு இருதரப்பு சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை முடிந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ‘லிங்கா’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை ‘லிங்கா’ படத்தின் முழுக் கதையுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு,
அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கேட்டு ரவிரத்தினம் சார்பில் கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை 2017 அக்டோர் 24-ல் தள்ளுபடிசெய்து கூடுதல் முன்சீப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்துசெய்து, ‘லிங்கா’ படத்தின் முழு கதையுடன்
கே.எஸ்.ரவிக்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிட வேண்டும்” என மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ரவிரத்தினம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு வழக்கை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.