தமிழ் சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் தரமான பாடல் வரிகளைத் தருகிற பாடலாசிரியர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மொழி கலப்பில்லாமல், இரட்டை அர்த்த ஆபாச வார்த்தைகள் இல்லாமல் பாடல்கள் எழுதுபவர்கள் அதிலும் சொற்பம் தான்.
அந்த சொற்பமானவர்களில் பாடலாசிரியை உமாதேவி மிகவும் முக்கியமானவர். அடிப்படையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியரான இவர், இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” படத்தில் எழுதிய “நீ நான் நாம் வாழவே” பாடலின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து “கபாலி”, “மகளிர் மட்டும்”, “அறம்”, “தீரன்” ஆகிய படங்களில் தனது தனித்துவமான இலக்கிய மனம் கமழும் வரிகளின் மூலம் முன்னணி பாடலாசிரியர் வரிசையில் இடம்பிடித்தார்.
அதிலும் குறிப்பாக “அறம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “புது வரலாறே.. புற நானூறே” பாடல் எளிய மக்களுக்கான நம்பிக்கை வரிகளை சுமந்திருந்தது எல்லோரிடத்திலுமே பாராட்டைப் பெற்றது.
பேராசிரியர், பாடலாசிரியர் போன்ற முகங்களைத் தாண்டி ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கி வரும் உமாதேவி, தற்போது “காலா” திரைப்படத்தில் “கண்ணம்மா கண்ணம்மா” என்ற பாடலையும் எழுதி இருக்கிறார். அவரது வெற்றிகரமான இந்தத் திரைப்பயணம் குறித்து பேசியிருக்கும் அவர்,
“ஒரு பெண்ணாக, அதிலும் ஒரு தலித் பெண்ணாக எனது உரிமைகளும், வாய்ப்புகளும் எந்த இடத்திலேயுமே மறுக்கப்படவில்லை. அப்படி கிடைத்த வாய்ப்புகளை நான் தவற விடவும் இல்லை. சினிமா குறித்து நான் யோசித்த தருணங்களில், சினிமாவை விட்டு நான் ஒதுங்க நினைத்த பொழுதுகளில் என்னை முன்னோக்கி நகர்த்தியவர் எனது கணவர் தோழர் பாரதி பிரபு தான்.
எனது வாழ்க்கையில் முக்கியமானதாக நான் கருதுவது நான் கற்ற கல்வியை தான். இன்று நான் அடைந்திருக்கும் புகழுக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் தொடக்கப்புள்ளியை ஆராய்ந்தால் அது கல்வியாகவே இருக்கும். ஒரு பெண்குழந்தை பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தாண்டினாலே போதும் என்றிருந்த இந்த சாதிய, ஆணாத்திக்க சமூகத்தில் எனது தந்தை தான் எனக்கான கல்வியை உறுதி செய்தார். “என் பொண்ணு அது படிச்சு, அது வாழ்க்கையை அதுவே பாத்துக்கணும்” என்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது (கண் கலங்குகிறார்).
இன்று நான் ஒரு பாடலாசிரியராக உங்கள் முன்னால் நிற்பதற்கு காரணமே எனது அப்பா தான். அவரது கனவின் வழியே நான் அண்ணல் அம்பேத்கரை பார்க்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், “இந்த சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் முழுமையாக நீங்கும் வரை இட ஒதுக்கீடானது தொடர வேண்டும்” என்கிற கோரிக்கையையும் முன் வைக்கிறார் உமாதேவி.