மாமனிதன் – MOVIE REVIEW

movie review
0
(0)

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் நாயகன் விஜய் சேதுபதி, மனைவி காயத்ரி, மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். விஜய் சேதுபதி தனது குழந்தைகளை பெரிய ஸ்கூலில் சேர்த்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.இந்நிலையில் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ஆட்டோ ஓட்டுவதை விட்டு, ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறுகிறார். இவரை ஊர் மக்கள் அனைவரும் நம்பி முதலீடு செய்கிறார்கள். நிலத்தை பதிவு செய்யும் நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் அனைவரையும் ஏமாற்றி விட்டு சென்று விடுகிறார்.இதனால் ஊரில் மானம் மரியாதை இழக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் இவரை போலீஸ் தேட ஆரம்பிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க வீடு, குழந்தை, மனைவியை விட்டு ஓடி விடுகிறார். இறுதியில் விஜய் சேதுபதி, மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? விஜய் சேதுபதியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, அன்பு, பாசம் அக்கறை கொண்ட நடுத்தர வர்க மனிதனாக நடித்திருக்கிறார். கோபத்தை அடக்குவது, பின்னர் வெளிப்படுத்தும் விதம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு போட்டியாக நடித்து அசத்தி இருக்கிறார் காயத்ரி. கணவர் மீது அக்கறை, பிள்ளைகள் மீது பாசம், ஊர் மக்களின் பேச்சை சமாளிப்பது என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். விஜய் சேதுபதியின் நண்பராக வரும் குருசோம சுந்தரம் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். கடினமான காட்சிகளை சாதாரணமாக நடித்து விட்டு செல்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் யதார்த்த நிலையை அப்படியே படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடும்பத்திற்காக தியாகம் செய்யும் மனிதன் மாமனிதன் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர். தனக்கே உரிய பாணியில் படத்தை கொடுத்து இருக்கிறார் சீனு ராமசாமி. மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்து இருக்கிறது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது. குறிப்பாக ‘நினைத்து ஒன்று… நடந்தது ஒன்று’ என்ற பாடல் தாளம் போட வைக்கிறது. சுகுமாரியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.