மீண்டும் வருகிறார் “மாட்டுக்கார வேலன்”!

News
0
(0)

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், மாட்டுக்கார வேலன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”. 

ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த மாட்டுக்கார வேலன் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர்  ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.

கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக  தயாராகிக் கொண்டிருக்கிறது. 

1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன, மாட்டுக்கார வேலன், இன்னும் மெருகூட்டப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்

நான் தழுவும் போது குலுங்கும் இசை ஆயிரம்

காதலென்னும் தேனிருக்கும் பாத்திரம்

அது காலம் தோறும் நான் குடிக்க மாத்திரம்

இருவருக்கும் இன்பம் என்னும் சாத்திரம்

காலம் இன்னும் உண்டு.

அதற்குள் என்ன ஆத்திரம்?

என்ற தேன் சிந்தும் கவியரசரின் வரிகளோடு அமைந்த “தொட்டுக்கொள்ளவா, நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா” பாடலும், “ஒரு பக்கம் பாக்குறா” பாடலும், “வாலிபக்கவிஞர்” வாலி வரிகளில் அமைந்த “பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா” ஆகிய இனிமையான காதல் சொட்டும் பாடலும் அமைந்த அற்புதத் திரைக்காவியம். “சத்தியம் நீயே தர்ம தாயே” பாடலும், “பட்டிக்காடா பட்டணமா” ஆகிய தத்துவப் பாடல்களும் இடம் பெற்றுள்ள திரைப்படம்.

எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே கமர்சியலுக்கும் குறைவிருக்காது, காதலுக்கும் குறைவிருக்காது. அப்படி, காதலென்னும் தேன் இருக்கும் பாத்திரம் ஆக அமைந்த படங்களில் ஒன்றான மாட்டுக்கார வேலன் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகும் செய்தி, நிச்சயமாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும், சினிமா காதலர்களுக்கும் கொண்டாட்டமான குதூகலமான செய்தியாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான மாட்டுக்கார வேலன் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.