மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5/5

cinema news movie review

மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு மட்டுமே அதோடு குறுகிய காலத்தில் தன் ஐம்பதாவது படத்தில் நடித்து முடித்து படத்தின் டைட்டல் போலவே இந்திய சினிமாவின் மஹாராஜாவாக வளம் வருகிறார்.

 

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி உடன் அபிராமி, மம்தா மோகன்தாஸ்,அனுராக் காஷ்யாப், நட்டி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பற்றிப் பார்க்கலாம். விஜய் சேதுபதி பாரதிராஜாவின் சலூனில் வேலை செய்து வருகிறார். மனைவியை இழந்த அவருக்கு ஒரே மகள் பள்ளியில் படித்து வருகிறார். மகளுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். மகள் பள்ளி சார்பில் நடைபெறும் முகாமில் பங்கேற்க சென்றுவிடுகிறார். அந்த சமயத்தில் தனது வீட்டில் லட்சுமி காணாமல் போய் விட்டதாக விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார். லட்சுமி என்று அவர் சொன்னது யாரை என்று அறிந்த போலீசார் விஜய் சேதுபதியை திட்டி அனுப்புகின்றனர். விஜய் சேதுபதி 5 லட்சம் பணம் தருவதாக சொல்ல, இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையிலான போலீஸ் விசாரணையில் இறங்குகிறது. மறுபுறம் எலக்ட்ரிக் கடை நடத்தி வரும் அனுராக் காஷ்யாப் தனது நண்பர் வினோத் சாகருடன் இரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து கொலை, கொள்ளை, திருட்டு தொழில் செய்து வருகிறார். இந்த கொள்ளை கும்பலுக்கும் குப்பைத் தொட்டியை காணவில்லை என்று புகார் கெடுத்துள்ள விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு? இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் ஏற்கனவே குரங்கு பொம்மை படத்தின் மூலம் நம்மை பிரமிக்க வைத்தவர். இப்படமும் அதேபோல் கொடுக்க முயன்றுள்ளார். கதை நான் லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகம் சற்று நீளம். மற்றும் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை இடைவேளை வரை சொல்லவில்லை. அதுவே சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் முன்பாதியில் காட்டிய அனைத்து காட்சிகளுக்கும் முடிச்சுப் போற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது நடிப்பால் கவர்கிறார். தான் நான் எல்லாமே செய்ய வேண்டும் என்று இல்லாமல் கூட நடிக்கும் சக நடிகர்களுக்கும் இடம் கொடுத்து கலக்கியுள்ளார். நிறைய இடங்களில் அடிவாங்குகிறார். தனது 50வது இடத்தில் இதுபோன்ற ஒரு படத்தில் மற்ற நடிகர்கள் நடிப்பார்களா என்பது சந்தேகமே. அனுராக் காஷ்யாப் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. நன்றாகவும் நடித்துள்ளார். ஆனால் டப்பிங் பிரச்சினை உள்ளது. இந்த கதையில் ஏன் இவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதற்கு கிளைமாக்ஸ் காட்சி சான்று. அபிராமி, மம்தா மோகன்தாஸ் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவர்களின் நடிப்பு நன்றாக உள்ளது. மகளாக நடித்துள்ளவரும் நன்றாக நடித்துள்ளார்.

அதேபோல் கெட்ட போலீசாக நட்டி அருமையாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் கோவம் வரவழைத்து நடுவில் டம்பி பீஸ் பாவா என அனுதாபம் வரவழைத்து இறுதியில் அடடே என கைதட்ட வைக்கிறது. பாய்ஸ் மணிகண்டன் நன்றாக நடித்துள்ளார். எதிர்பாராத முடிவு அவருக்கு. மற்றபடி சிங்கப்புலி, முனீஷ்காந்த், கல்கி, துரை என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். சாதாரண பழிவாங்கும் கதைதான் அதனை வித்தியாசமான கோணத்தில் சொல்லி முத்திரை பதிக்கிறார் இயக்குனர் நித்திலன். படத்தில் வெளியே சொல்லக்கூடாத காட்சிகள் பல உண்டு. அதனை படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். பாரதிராஜா சென்டிமென்டுக்காக நடித்துள்ளார்.

படத்தில் ஒரே பாடல்தான் அதுவும் மாண்டேஜ் ஆக வந்து போகிறது. தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாதது படத்தின் மிக பெரிய பலம் நித்திலனின் திரைக்கதையில் இரண்டாம் பாதி அற்புதமாக இருக்கிறது.கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் பேசப்படும். கேமரா ஒர்க் சூப்பர். மொத்தத்தில் மகாராஜா – மக்களின் ராஜா. ரேட்டிங் 4.5.