full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி மகாராஷ்டிரா அரசு

65 வயதை கடந்தவர்கள் பங்கேற்க தடை உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மகாராஷ்டிரா அரசு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனிடையே சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் சில மாநிலங்கள் அனுமதி அளித்திருந்தன. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. சமூக இடைவெளி, குறைவானவர்களை படப்பிடிப்பில் பயன்படுத்துவது, தூய்மையை கடைப்பிடிப்பது என்றெல்லாம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் 65 வயதான நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கு கண்டிப்பாக வரக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் யாருக்காவது உடல்நிலை பாதித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு மருத்துவக்குழு எப்போதும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மற்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட சினிமாத்துறையினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையை மட்டும் ஏற்க மறுத்துவிட்டனர். வயதான நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய திரைப்பட தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
காரணம் அமிதாப்பச்சன், அனுபம்கேர், ஷக்தி கபூர், நசுருதீன் ஷா, பரேஷ் ராவல், மிதுன் சக்கரவர்த்தி, சுபாஷ்கை, மகேஷ்பட், சேகர் கபூர், மணிரத்னம், ஜாவேத் அக்தர், பிரியதர்ஷன் உள்ளிட்ட பல மூத்த கலைஞர்கள் இந்த நிபந்தனை காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது. ஆகையால் இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.