full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் களத்தில் வேகம் காட்டி வருகிறார். மதுரையில் பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய கமல், பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது கட்சி பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், அப்பணிகளை முடித்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென சந்தித்து பேசினார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து சோனியா-ராகுல் இருவரிடமும் கமல் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது தனது புதிய கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப்பணிகள் பற்றி கமல் எடுத்துக் கூறினார். அதனை சோனியா-ராகுல் இருவருமே கவனமுடன் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் விவாதித்தனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில் சோனியா-ராகுல் இருவரையும் கமல் சந்தித்து பேசி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து அக்கட்சி இப்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டதாகவும் அதன் எதிரொலியாகவே இந்த சந்திப்பு நடந்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்த்து செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் இது தொடர்பாக பேட்டி அளித்தார்.

கே:- டெல்லியில் சோனியா-ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசி இருப்பது காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமா?

ப:- சோனியா, ராகுல் காந்தி இருவரையும் மரியாதை நிமித்தமாகவே சந்தித்து பேசினேன். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். நீங்கள் நினைப்பது போல கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் நான் ஒருவழி பாதையில் செல்வதாக நினைத்து விட வேண்டாம். எனது பாதை எது? என்பதை நான் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன்.

கே:- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுமா?

ப:- அது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்பேன்.

கே:- காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

ப:- காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் அனைத்து முடிவுகளும் வித்தியாசமானதாகவே உள்ளது. அதனை ஒவ்வொரு முறையும் விமர்சித்து கொண்டேதான் இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம். காவிரி ஆணையத்தை முறையாக செயல்படுத்த நாம் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். எல்லா விதமான அழுத்தங்களையும் தர வேண்டும்.

காவிரி விவகாரத்தில் உண்மையிலேயே வெற்றி விழாவை கொண்டாட வேண்டியவர்கள் விவசாயிகள்தான். நாம் அதனை வழிமொழிய வேண்டும். அதற்கு முன்னாடியே அதிமுக அரசு சாவிக்கு ஆசைப்படுவதையே காட்டுகிறது. டெல்லி சென்றிருந்த போது அரவிந்த் கெஜ்ரிவால் வெளியூர் சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.” என்று கூறினார்.