full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

மன்னர் வகையறா விமர்சனம்!

முதலில் இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு நன்றிகள்..  இந்த மண்ணில் சாதி வலுவானதாகவே இருக்கிறது என்பதை எந்த பூசலும் மொழுகலும் இல்லாமல் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நியாயப்படுத்தவும் வேறு செய்கிறார். எப்படியெனில், எங்கிருந்தோ வரும் ஷெட்டி, ரெட்டி, மேனன் எல்லாம் சாதி போட்டிக்கொள்ளும் போது இந்த மண்ணில் நாங்கள் சாதியை பெயருக்கு பின் போட்டுக்கொள்ளக் கூடாதா? என்று கேள்வி எழுப்புகிறார்.

நல்ல கேள்வி பூபதி பாண்டியன் சார். பெரியார் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாய்ப் பெருமைப்பட்டிருப்பார். ஒருவேளை பூபதி பாண்டியன் பழுத்த தமிழ்த் தேசியவாதியாய் இருப்பாரோ?

சரி.. சரி.. இதெல்லாம் பார்த்தால் “மன்னர் வகையறா” முழுக்க இப்படித்தான் தெரியும். எனவே வெறுமனே கல்லா கட்டும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டிருக்கிற கமெர்ஷியல் சினிமா என்கிற ரீதியில் மட்டுமே பார்க்கலாம். காலம் காலமாக தமிழ் சினிமா அடித்து துவைத்து காயப்போட்ட பழைய பெருமை குடும்பக் கதை தான். இருந்தாலும் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வினால் சாயம் போகாமல் புதிதாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

  • படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால் “கயல்” ஆனந்தி தான். சும்மா, தெறிக்க விடுகிறார். இந்தப் பெண்ணுக்கு இப்படியெல்லாம் கூட நடிக்க வருமா? என்று எல்லோரும் கேட்குமளவிற்கு “லொள்ளு” செய்திருக்கிறார். அதே போல “கட்டாயக் கவிஞர்” பூபதி பாண்டியன் எழுதியிருக்கிற இறுதிப் பாடலில் ஆனந்தியின் ஆட்டம் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. சோ கியூட் ஆனந்தி. ஆனாலும், சில இடங்களில் மட்டும் ஓவர் ஆக்டிங் துண்டாக தெரிகிறது.

அடுத்தது இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய். முதல்பாடல் தவிர்த்து ஏனைய பாடல்கள் அனைத்தையுமே கேட்கும் விதத்தில் தந்திருக்கிறார். அதே போல சில இடங்களின் இரைச்சலைத் தவிர்த்து பார்த்தால் பின்னணி இசையிலும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

நடிகர் விமலுக்கு இதில் தயாரிப்பாளர் என்கிற கூடுதல் சுமை வேறு. முந்தைய அவரது  படங்களிலிருந்து பார்த்துவரும் அதே விமல். நிறைய பாசம், நிறை அடிதடி கூடவே நிறைய பேச்சு என கம்ப்ளீட் ஆக்‌ஷன் ஹீரோவாக முயற்சி செய்திருக்கிறார். நிறைய இடங்களில் வசனங்களுக்கு சம்பந்தமில்லாத இவரின் உதட்டசைவு நன்றாகவேத் தெரிகிறது.

பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், கார்த்திக் குமார் எல்லோருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ரோபோ சங்கர், சிங்கம்புலி இருவரும் பட்டாசு கொளுத்துகிறார்கள் காமெடியில். சொல்லப்போனால் இருவரும் தான் படத்தின் ஆறுதல். குறிப்பாக சிங்கம்புலி, தனக்கு கிடைத்திருக்கிற ஒவ்வொரு இடத்திலும் சரவெடி போடுகிறார். ரோபோ சங்கர் பேசும் பல வசனங்கள் உறுத்துவதாலும், அவர் பேசுகிற இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைப்பதாலும் அவரது நல்ல நடிப்பு நமக்கு ஒட்ட மறுக்கிறது. இவர்கள் இருவரைத் தவிர, இரண்டு காட்சிகளில் வந்தாலும் தன்னை நிரூபிக்கிறார் யோகி பாபு.

மொத்தத்தில் காமெடி என்ற ஒரு விசயத்தினால் மட்டுமே இந்த “மன்னர் வகையறா” தாக்குப்பிடித்து நிற்கிறது.

மேலும், காலங்காலமாக சாதியையும் அடிதடி வெட்டுக்குத்தையும் மதுரை சினிமாவில் மட்டும் தான் பார்க்க முடியும் என்பதை உடைத்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி பக்கம் மடைமாற்ற முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பூபதிபாண்டியன். நிச்சயமாய் “மன்னர் வகையறா” அந்தப்பகுதி ரசிகர்களை குஷிப்படுத்தும்!!