full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மன்சூர் அலிகான்

சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்ன தான் நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக நேரடியாக சென்றேன். அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும், வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன்.

இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டு மாண்டு விடும் அபாயம் இருக்கிறது.

எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடிநீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரைப் போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது. இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும், குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்டு தமிழ்நாடு விவசாயமற்ற வறண்ட காடாகிவிடும். மக்கள் உணவிற்கு சீனக் காரனிடம் கையேந்தி நிற்கவேண்டி வரும்.

டெல்லியிலும், இங்கும் போராடும் விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது நாளைய தமிழகத்திற்கு நல்லதல்ல. விவசாயிகள் போற்றப்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு மின்சாரம், தண்ணீர் போன்ற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும். விவசாயிகளுக்குத் தான் இந்த அரசு என்று சொல்லும் மோடி அரசு நானூறு தமிழக விவசாயிகளை பணச் செல்லாமை மூலம் சாகடித்ததோடு நில்லாமல், காவேரி மேலாண்மையும் அமைக்க விடாமல் நீதி மன்றத்தை மிரட்டியதோடு அல்லாமல், தமிழக ஏழை விவசாயிகளுக்கு கடன் சுமையை தள்ளுபடி செய்யாமல், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி சலுகைகள் செய்கிறார்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் மிகப் பெரிய, அரிய ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நகர நாகரீக வாழ்க்கையைக் கண்டுபிடித்த அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு இந்த அரசுகளும், தமிழ் அமைப்புகளும் பாராட்டி வெகுமதிகள் அளித்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை தடுத்து நிறுத்தியதோடு, உப்புக்கு சப்பாணியாக வேறு ஒருவரை நியமித்து தமிழக வரலாற்றை அளிக்கிறது. அவர் கண்டுபிடித்ததை மண்ணோடு புதைத்து விட்டது.

தமிழக அரசு தனக்கென தொல்லியல் துறையை அமைத்து, அமர்நாத்தை கொண்டே மற்றும் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறை தலைவர்களின் மேற்பார்வை கொண்டு கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும்.

இனியும் தமிழரை நாலாந்திர குடிமக்களாக மத்திய அரசு நடத்தினால் அதிரடியாக நான் நேரில் இறங்கி இந்த அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.