மதிமாறன் திரைவிமர்சனம்
செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த மதிமாறன்.படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பார்வேஸ்.
அயலான் படத்தில் ஏலியனுக்கு டூப்பாக நடித்த வெங்கட் செங்குட்டுவன் முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம் இது இவருக்கு இது இரண்டாவது படம் ஆனாலும் இந்த படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் என்று தான் சொல்லணும்.
கிராமத்தில் தபால்காரராக இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர் தான் வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி).
நெடுமாறன் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார். இதனால், பலரும் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
எதை பற்றியும் கவலை படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார்.
இவருக்கும் கல்லூரி தோழியான ஆராத்யாவிற்கும் காதல். இப்படியாக செல்கிறது இவர்களது வாழ்க்கை., ஒருநாள், இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர்.
கடும் மன உளைச்சலில் இருந்த எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள்.
செய்வதறியாது திகைத்து நிற்கிறார் நெடுமாறன். கோபத்தோடு தனது சகோதரியை காண சென்னை பயணப்படுகிறார். அதே சமயம், சென்னையில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் கற்பழித்து கொல்லப்படுகின்றனர். சென்னைக்கு போன நெடுமாறன் கதை என்னவானது.? சென்னையில் நடக்கும் தொடர் கொலைக்கு யார் காரணம் .?? இந்த இரண்டிற்கான விடை இரண்டாம் பாதியில் இருக்கிறது.
நாயகனான வெங்கட் செங்குட்டுவன், நெடுமாறன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பள்ளி படிக்கும் போதும் சரி, கல்லூரி படிக்கும் சரி , வாழ்க்கையில் பயணப்படுவதாக இருக்கட்டும் என தனது மெச்சூர் நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.
அவ்வளவு எனர்ஜி கொண்டு, ஒரு அனுபவ நடிகர் என்ன நடிப்பைக் கொடுப்பாரோ அந்த நடிப்பைக் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். அவர் எண்ட்ரீ ஆகும் முதல் 5 நிமிடங்களிலே அவரது கதாபாத்திரத்தை நாம் உள்வாங்கிக் கொள்ளும்படியான நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்துவிட்டார் வெங்கட். நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தை பிடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாச்சியார், லவ் டூடே படங்களுக்குப் பிறகு மிகவும் யதார்த்தமான நடிப்பை இப்படத்தில் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார் நடிகை இவானா. குற்ற உணர்ச்சியால் உருக்குலைந்து நின்று அழும் காட்சிகளில் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்துவிட்டார் இவானா.
நாயகி ஆராத்யா, கல்லூரியில் இளமையாகவும், போலீஸாக மிடுக்கெனவும் தோன்றி கதாபாத்திரத்திற்கு பூஸ்ட் ஏற்றியிருக்கிறார். போலீஸ் கேரக்டரை பக்காவாக செய்து முடித்திருக்கிறார் ஆராத்யா.
நாளுக்கு நாள் தனது அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்ந்து கொண்டே செல்கிறார் நடிகர் எம் எஸ் பாஸ்கர். தனது மகனுக்கு எனர்ஜீ ஏற்றுவதில் ஆரம்பித்து மகள் ஓடிப் போனதும் அவர் கூறும் கதை வரை ஆகட்டும், நடிப்பில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார்.
மிகவும் அழகான ஒரு வாழ்வியலை கொண்டு வந்து கண்முன்னே நிறுத்தி அதில் உயிரோட்டமான திரைக்கதையை அமைத்து விருந்தாக மதிமாறனை படைத்திருக்கிறார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பைக் கொடுத்து டாப் லிஸ்ட் இயக்குனர் வரிசையில் இணைந்து விட்டார் மந்திர வீரபாண்டியன்.
அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு தேடுதலை படம் முழுக்க வைத்திருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம். க்ளைமாக்ஸ் சற்று ஷார்ப்பாக முடித்திருந்தால் இன்னும் கூடுதல் பலம் ஏறியிருந்திருக்கக் கூடும்.,
மதியும் நெடுமாறனும் இறுதியில் வந்து சேர்ந்த இடம் மனசுக்கு டச் தான்…. இறுதியில் போஸ்ட் மாஸ்டரிடம் நெடுமாறன் பேசும் வசனங்கள் க்ளாப்ஸ்..
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசனை தான். பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் தூணாக நிற்கிறது.
மதிமாறன் – அனைவரையும் கவருகிறான்