full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

திரைக்கு வரும் “மாயபிம்பம்“ திரைப்படம்!

 

 

 

 

 

 

சினிமாவில்  கதையே அரசன் என்பதை காலம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. புத்தம் புது நடிகர்கள்,  பெரும்பெயரற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருந்தாலும் கதை நன்றாக இருப்பின் அப்படங்கள் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. ஆனால் இத்தகைய புது முயற்சிகள் அத்தனை சீக்கிரம் திரையை அடைவதில்லை அதற்கு மிகப்பெரும் ஆளுமைகளின் பெரும் பாராட்டுக்கள் தேவைப்படுகிறது. இம்மாதிரியான புதுமுகங்களுடைய  படத்தின் வெளியீட்டிற்கு பெரும் ஊக்கமாக அந்த பாரட்டுக்கள் அமைகிறது. அந்த வகையில்  தயாரிப்பாளர் மற்றும்  படைப்பாளி K.J. சுரேந்தர் தனது முதல் கனவுபடைப்பை உருவாக்கி வெளியீட்டிற்கு கொண்டுவரும் நிலையை அடைந்திருக்கிறார். தமிழ் சினிமா ஆளுமைகளின் பெரும் பாராட்டில் அவரது “மாயபிம்பம்” படைப்பை மாஸ்டர்ஃபீஸ் (Masterpiece)  நிறுவனம் வெளியிட முன்வந்திருக்கிறது.

 

K.J. சுரேந்தர் இது குறித்து கூறியதாவது…

 

 

 

 

 

 

நான் “மாயபிம்பம்” படத்தை எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியால் தான் முடித்தேன். படம் முழுமை அடைந்த பிறகு தமிழ் சினிமாவின் ஆளுமைகள் சிலருக்கு படத்தை திரையிட்டு காட்டினேன். அனைவரும் வெகுவாக பாராட்டினர் அதில் இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் போஸ் அவர்கள் பாராட்டியதோடு நில்லாமல் படத்தை வெளியிட மாஸ்டர்ஃபீஸ் (Masterpiece) நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள். இப்போது அவர்கள் தான் இப்படத்தை விநியோகம் செய்கிறார்கள். இப்படம் கூடலூர், சிதம்பரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இயல்பான மொழியில் கமர்ஷியல் தன்மை நிறைந்த சினிமாவாக இப்படம் உருவாகியுள்ளது. உணர்ச்சிபூர்வமான காதல் கதையில் ஒரு நல்ல நட்பும், குடும்ப மதிப்புகளும்  நிறைந்திருக்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தின் மிக முக்கிய அம்சமாக வலு மிகுந்த பெண் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும்.

 

 

 

 

 

“மாயபிம்பம்” படத்தில் ஆகாஷ், ஹரி ருத்ரன், ஜானகி, ராஜேஷ் பாலா, அருண் குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். நந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். வினோத் சிவக்குமார் படத்தொகுப்பு செய்ய மார்ட்டின் டைடஸ் கலைஇயக்கம் செய்துள்ளார். எழுது இயக்கியதுடன் Self Start Productions சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கிறார் K.J.சுரேந்தர் .