full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

முதல் பார்வை – மாயநதி

 அபி சரவணன்  வெண்பா  அஷோக் தியாகராஜன்   ராஜா பவதாரிணி   ஸ்ரீநிவாசன் தேவாம்சம்
‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் கதாநாயகியை ஒரு இளைஞன் காதலிப்பதாக கூறுகிறான். படம் மாயநதி – விமர்சனம்.
கதையின் கரு:  ‘ஆடுகளம்’ நரேனின் ஒரே மகள், வெண்பா. மகளை நரேன் செல்லமாக வளர்க்கிறார். ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் இவரை ஒரு இளைஞன் காதலிப்பதாக கூறுகிறான். அவனையும், அவன் காதலையும் வெண்பா அலட்சியப்படுத்துகிறார். ஆத்திரத்தில், அந்த இளைஞர் வெண்பா மீது திராவகம் வீசுகிறான்.

அவனுடைய கொலை வெறியில் இருந்து வெண்பாவை, அபிசரவணன் காப்பாற்றுகிறார். அவர் மீது வெண்பாவுக்கு நல்லெண்ணம் ஏற்படுகிறது. அதுவே இருவருக்கும் இடையே நட்பை வளர்த்து, காதலாக மாற்றுகிறது. காதல் வசப்பட்ட பின், வெண்பாவுக்கு படிப்பில் கவனம் குறைகிறது. சாப்பாடு, தூக்கம் இழக்கிறார். அவரை அபிசரவணன் வற்புறுத்தி, ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்.

மாலையும் கழுத்துமாக மகளை பார்த்து நரேன் அதிர்ச்சி அடைகிறார். வீட்டில் இருந்து வெளியேறி, காணாமல் போகிறார். பரீட்சையில் குறைந்த மார்க் வாங்கியதால், வெண்பாவுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகிறது. காதல் மனைவி வாழ்க்கை தன்னால் வீணாகிவிட்டதே என்ற வேதனையில், அபிசரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். வெண்பா மிக குறைந்த சம்பளத்துக்கு ஒரு வேலையில் சேருகிறார்.

அபிசரவணன், களையான முகம். காதலர் வேடத்துக்கு பொருந்துகிறார். வெண்பாவை ஒருதலையாக காதலிக்கும்போது, அவர் முகமெல்லாம் பிரகாசிக்கிறது. காதலி தன்னை மறந்து விடுவாளோ என்று சந்தேகப்படும் காட்சியில், காதலின் வேதனைகளை முகத்துக்கு கொண்டு வருகிறார்.

வெண்பாவுக்கு கனமான கதாபாத்திரம். அப்பா மீது அபரிமிதமான பாசம், படிப்படியாக காதல்வசப்படுவது, அப்பா பாசத்தையும் தாண்டி காதலரின் பிடியில் சிக்குவது, படிப்பில் இருந்து கவனம் விலகுவது என நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம். வெண்பா மிக இயல்பாக நடித்து, கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்

படத்தின் கருவே அப்பா-மகள் பாசம்தான் என்பதால், நரேனுக்கும் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு. மகள் மீதான அதிக நம்பிக்கை, அந்த நம்பிக்கை தூள் தூளாகும்போது ஏற்படும் அதிர்ச்சி, வேதனை ஆகிய உணர்ச்சிகளை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். அபிசரவணனின் நண்பராக அப்புக்குட்டி, சில காட்சிகளில் ஒரு நல்ல நண்பருக்கு உதாரணமாக உயர்ந்து நிற்கிறார்.

ராஜா பவதாரிணியின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவும், கூடுதல் அம்சங்கள். இடைவேளை வரை கதை அதிக கவனம் பெறாமல் கடந்து போகின்றன. இடைவேளைக்குப்பின் கதையும், காட்சிகளும் உயிரோவியங்களாக மனதில் ஆழமாக பதிகின்றன. கடைசி காட்சிகள் இரும்பு இதயங்களை கூட இளக வைத்து விடும். டைரக்டர் அசோக் தியாகராஜனுக்கு விருது நிச்சயம்!