தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சிறிது இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதுவரையிலும் சமூக வலைத்தள பக்கங்களில் இல்லாமல் இருந்தவர், தற்போது முதல் முறையாக சமூக வலைத்தளமான இன்ஸ்டா பக்கத்தில் இணைந்திருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த #சண்டக்கோழி, #ரன் மற்றும் மலையாள படம் உட்பட, திரையில் மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்ததன் மூலம் , ஒரு சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
தேசிய விருது பெற்ற கலைஞரான இவர் முதல் முறையாக சமூக ஊடக பக்கத்தில் நுழைந்திருக்கிறார். பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜெயராம் உடன் இணைந்து நடிக்கும் #மகள் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல் பதிவாக பகிர்ந்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சத்தியன் அந்திக்காடு இயக்குகிறார்.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள இப்படத்தில் ஜெயராமுடன் ஜூலியட் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துவருகிறார்.நடிகை மீரா ஜாஸ்மின் தனது முதல் பதிவில், வாழ்வின் புதிய தொடக்கத்தில் எல்லோருடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், ரசிகர்களுடன் இணைந்திருப்பது, நமது வளர்ச்சிக்கு எந்தளவு முக்கியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். திரைத்துறை மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பல பிரபலங்கள் மீராவை சமூக வலைத்தள பக்கத்தில் வரவேற்று தங்கள் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.