87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.
அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.
முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. இன்று அறிவித்தது.
தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மெகபூபா முப்தி தீர்மானித்துள்ளார்.
இன்று மாலை ராஜ் பவனுக்கு செல்லும் மெகபூபா, கவர்னர் என்.என். வோராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக பி.டி.பி. கட்சியை சேர்ந்த மூத்த மந்திரி நயீம் அக்தர் தெரிவித்துள்ளார்.
அவரது ராஜினாமா ஏற்கப்பட்டால் அடுத்த 6 மாதங்கள்வரை காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும். பின்னர், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.