நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாகக் காட்சிக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள்குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெர்சல் திரைப்படத்தில் என்ன தவற்றை நீங்கள் பார்த்தீர்கள் என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு என்றும் மெர்சல் என்பது படம் மட்டும்தான் அது நிஜவாழ்க்கை அல்ல என்றும் கூறினர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் தவறாகச் சித்திரிக்கப்படுதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கலாமே என்றும் பொதுநலனில் அக்கறை இருந்தால் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோரலாமே என்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்தியாவில் எவ்வளவு பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது எனத் தெரியுமா என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மெர்சல் படத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறுவது எப்படி என்றும் மெர்சல் படத்தின் இடம்பெற்றுள்ள வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு என்றும் படத்தில் உள்ள வசனங்கள் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கூறுங்கள் என்றும் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பினர்.
மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டிக்கு எதிராக தவறான தகவல் உள்ளதாக மனுதாரர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், படவசனங்களை கண்மூடித்தனமாக ஏற்பார்கள் என்பதை ஏற்க முடியாது என்றும் கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது என்றும் பிடிக்கவில்லையெனில் படத்தை பார்க்காதீர்கள் என்றும் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்தரிப்பதை எதிர்த்து மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறிய நீதிபதிகள், ஒரு படத்தில் காட்சிகளை அனுமதிப்பதா? வேண்டாமா என்பதை தணிக்கை வாரியம்தான் முடிவு செய்யும் என்றும் மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறியும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.