full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தளபதியின் மெர்சல் – ஒரு பார்வை

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 61’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 அன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதன்பின்னர் ஒருநாள் முன்னதாகவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ரொம்பவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தலைப்பாக ‘மெர்சல்’ என்று சென்னை பாஷையில் பெயர் வைத்துள்ளனர். பனியனுடன் விஜய் முறுக்கு மீசையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். பின்னணியில் காளைகள் பாய்ந்து வருவது போலவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.

`மெர்சல்’ என்ற தலைப்பின் முதல் எழுத்து ஜல்லிக்கட்டு காளையின் கொம்பில் ஆரம்பித்து வாலில் முடிவது போல அதன் லோகோ இருக்கிறது. படத்தில் ஜல்லிக்கட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை தலைப்பு மற்றும் போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் இந்த போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக இளையதளபதிக்கு பதிலாக தளபதி என்று அடைமொழி வைத்துள்ளனர். விஜய், சினிமாவிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் இளைய தளபதி என்ற பட்டப்பெயருடன் வலம் வந்து கொண்டிருந்தார். இருந்தாலும் கடந்த சிலவருடங்களாக அவரது ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்றே அழைத்து வந்தார்கள். ஆனால், தற்போது படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ போஸ்டரிலேயே விஜய்க்கு தளபதி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளான இன்று `மெர்சல்’ படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியானது. அதில் விஜய் ஒரு சிவப்பு நிற கோட்டுடன் சீட்டுக்கட்டுகளை சிதற விடுகிறார். அவரது பின்னணியில் ஒரு கவர்ச்சிகரமான மாயை இருப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் விஜய்யின் கண்களை உற்று கவனிக்கும் போது, அவரது கண்களில் ஒரு ஈர்ப்பு இருப்பதும் தெரிகிறது. இதிலிருந்து படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் ஒரு ஒரு மேஜிக் கலைஞர் என்பதை ஊகிக்க முடிகிறது.

இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த மூன்று கதாபாத்திரங்களில் ஒன்று ஊர் தலைவர், மற்றொன்று மருத்துவர் என்பதை நாம் முன்னதாகவே பார்த்திருந்தோம். விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்னவென்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், போஸ்டரின் மூலமாக அந்த கதாபாத்திரம் குறித்த தகவலும் தற்போது உறுதியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் ஒவ்வொரு படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவருடைய ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள். விஜய்யின் ‘பைரவா’ வெளிவந்த சமயம் நெல்லை விஜய் ரசிகர்கள் 150 அடியில் கட்அவுட் வைத்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்கள்.

இந்நிலையில், இன்று விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பலவகையிலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வரிசையில், நெல்லை ரசிகர்கள் 4 ஆயிரம் அடியில் விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டி பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே இதுவரை வேறு எந்த நடிகருக்கும் இத்தனை அடி நீளத்தில் போஸ்டர் அடித்து ஒட்டியது கிடையாது என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் விஜய் ரசிகர்கள் செய்த ஒரு சாதனையாகவே இது கருதப்படுகிறது.