எத்தனை சர்ச்சை.. எத்தனை எதிர்ப்பு.. அவை அத்தனையையும் உடைத்து விஸ்வரூப வெற்றி பெற்று “மெர்சல்” காட்டியது விஜய்-அட்லி-தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கூட்டணி.
ஜி.எஸ்.டி வரி குறித்த வசனம், மருத்துவத் துறையில் நடக்கும் வசூல் போன்ற பல வசனங்கள் படத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும் தமிழக பாஜக பல குற்றச்சாட்டுகளை வைத்து இப்படத்திற்கு எதிராக போராடியது.
ஆனாலும், தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சத்தியராஜ், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர்நடித்திருந்தார்கள்.
யூ-டியூப் வலைதளத்தில் அதிக பார்வையாளர்கள், அதிக வசூல், விகடன் விருதுகள் என மகுடம் சூட்டிய இந்தப் படத்திற்கு, தற்போது இங்கிலாந்து தேசிய திரைப்பட விழாவிலும் விருது கிடைத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 4 வது தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை மெர்சல் படம் வென்றுள்ளது. இந்த விருதுக்காகன பட்டியலில், பிரான்ஸ், ரஷ்யா, சிலி, தென்னாப்பிரிக்கா, சுவீடன் நாட்டுப் படங்கள் இருந்தன. எனினும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மெர்சல் படம் இந்த விருதை வென்றுள்ளது. இந்த விருது முழுக்க முழுக்க ரசிகர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாகும்.
மெர்சலுக்கு கிடைத்திருக்கும் இந்த விருதினால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.