தென்மேற்கு பருவமழை நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நேற்று முற்றிலும் விலகியது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக தெரிகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான அறிகுறிகள் நிலவி வருகின்றன. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தற்போது கடலோர பகுதியில் தொடங்கிய மழை மற்ற பகுதியிலும் மிதமாக பெய்யக் கூடும். கடலில் இருந்து ஈரப்பதத்துடன் காற்று வீசி வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.” என்றுகூறினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதே போல் ஈரோடு, திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூர் சிவகங்கையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளில் லேசான மழை தூறல் இருந்தது.
சென்னையில் நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் லேசான தூறல் விழுந்தது. குளிர்ந்த காற்றும் வீசியதால் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருவதால் இன்று மேலும் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.