full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சாக்லேட்’ குறும்படம் படமல்ல= பாடம் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு

பன்னிரண்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் படமல்ல பாடம் என்று செய்தி மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி என்கிற நட்ராஜ், காயத்ரி,தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர்
நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார். குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி பின்னணி பாடியிருப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறும்படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வு ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் அமைச்சர் கடம்பூர்  ராஜு, விருகம்பாக்கம் தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் விருகை வி என் ரவி, விளாத்திகுளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஐசரி கே கணேஷ், ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சாய் தன்ஷிகா, இசையமைப்பாளர் ஜிப்ரான் , தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான கவிதா உள்ளிட்ட
பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர்,“இந்த குறும்படத்தை நான் பார்த்துவிட்டேன். சென்னையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது படமல்ல பாடமாக எடுத்துக கொள்ளவேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் இந்த குறும்படத்தை அவசியம் பார்க்கவேண்டும்.
படத்தில் நடித்த அந்த குழந்தையின் நடிப்பை நான் பாராட்டுகிறேன். இதனை உருவாக்கியபடக்குழுவினருக்கும், இதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் சங்க நிர்வாகியும் இயக்குநருமான ஆர் வி உதயகுமார் பேசுகையில்,“ தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் வகையில்,ஆன்லைன் மூலம் மட்டும் தான் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது . இதற்காக தமிழ் திரைப்பட துறையினர் அரசிற்கு நன்றி தெரிவித்துக கொண்டிருக்கிறார்கள். சாக்லேட் குறும்படம் படமல்ல. பாடம் என்று அமைச்சர் சொன்னதை நான் வழிமொழிகிறேன். இந்த குறும்படம் பேசும் விசயமான குட் டச் பேட் டச்சை எல் கே ஜி, மற்றும் யூ கே ஜி
குழந்தைகளுக்கான பாடதிட்டத்தில் சேர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகிறேன். அரசு இதில் ஆவணசெய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பிறகு குழந்தைக்கு தெரிந்துவிடும். ஒரு பெண் குழந்தையை ஒழுக்கமாக வளர்த்தால் அது பெண்களுக்கு மிகப்பெரும் பெருமையை அளிக்கும். ஒரு ஆண் குழந்தையை ஒழுக்கமாக வளர்த்தால்..அது மனித சமுதாயத்திற்கே பெருமை. இந்த ஒழுக்கம் எங்கே விதைக்கப்படுகிறது? பள்ளியில் தான் என்பதால் இதனை பாடமாக வைத்துவிட்டால் அனைத்து குழந்தைகளுக்கும் எங்கே தொட்டால் நல்லது என்பதும், எங்கே தொட்டால் கெட்டது என்பதும் தெரிந்துவிடும். இது போன்ற ஒரு குறும்படத்தை தயாரித்த கவிதா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் நட்ராஜ் பேசுகையில்,“ ஆண் பெண் என இருவருக்கும் பாலியல் பற்றிய புரிதல் தேவை.பெண்கள் பூப்பெய்திய பிறகு அவர்கள் வீட்டு பெரியவர்கள் சில விசயங்களில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். ஆனால் ஆண்களுக்கு இது போன்ற வழிகாட்டிகள் அமைவது கடினம். இயக்குநர் ஆர் வி உதயகுமார்வலியுறுத்தியதைப் போல் பாலியல் பற்றிய புரிதலை பள்ளியில் பாடமாக வைத்துவிட்டால் ஆண் குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும்.இந்த குறும்பட குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள். ” என்றார்.

நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில், “பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து இது போன்ற சமூகத்திற்கு தேவையான குறும்படத்தை உருவாக்கியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த குறும்படத்தின் தயாரிப்பாளர் கவிதா ஊடகவியலாளர் என்பதைக் கடந்து சிறந்த சமூக சேவகி, சமூக வலைதளத்தில் செல்ஃபியை பதிவிடுவதை விட சமூகத்திற்கு தேவையான விசயத்தை பதிவிடலாம் என்பதற்காக என்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் குட் டச் பேட் டக் குறித்து யூட்யூபில் பதிவிடப்பட்டிருந்த ஏராளமான வீடியோவில் பெற்றோர்கள் சொல்லிய சில வீடியோக்களை எடுத்து பதிவிட்டிருக்கிறேன்.  பொதுவாக தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் முழுமையாக கவனிப்பதில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இந்த குறும்படம் பெற்றோர்களையும்
சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து சாக்லேட் குறும்படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் கவிதா நன்றி தெரிவித்தார்.