full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

செயல் தலைவர், தலைவரானார்.. தி.மு.க-வின் புதிய அத்தியாயம் தொடங்கியது!

தி.மு.க. தலைவர் திரு. கலைஞர்.மு. கருணாநிதி அவர்களின் மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி வெற்றிடமானது. அந்த இடத்தினை நிரப்புவதற்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் 2 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், திமுக பொதுக்குழு இன்று காலை கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கூடியது.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தந்தை கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்ட அவர் காலை 9.30 மணியளவில் அறிவாலயம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் கலைஞர் அரங்கிற்கு வந்ததும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில், கட்சி தலைவராக ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார். அதேபோல் பொருளாளராக பதவி ஏற்கும் துரைமுருகனும் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார்.

இதனை திமுக தொண்டர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.