full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார் மோடி

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் உதயகுமார், “மாவட்டம் தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நிறைவாக, சென்னையில் நடைபெறும் விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குகள் இருப்பதாக தினகரன் கூறிவரும் கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சி, சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறது. இந்த ஆட்சி மீது உரிமை கோர தினகரனுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. ஜெயலலிதா மறைவின் போது, சில தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொதுவாழ்வில் இருந்து தினகரன் 10 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார். அதனால், இந்த ஆட்சியைப் புரிந்துகொள்ள அவருக்கு கால அவகாசம் தேவைப்படும். பொய்யான தகவல்கள் பரப்புவதை தினகரன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவதூறு பரப்பினால் டிடிவி தினகரன் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தில் அளிக்க இருக்கிறார்கள். பின்னர், அந்த ஆவணங்கள் குறித்தும், வழக்கின் தன்மை குறித்தும் ஆய்வுசெய்து, தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னம் குறித்து தீர்ப்பு வழங்கும்.

சேலத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், எம்.ஜி.ஆர் கண்டெடுத்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதேபோல நாமக்கல்லில் நடைபெற்றக் கூட்டத்தில், இதே கருத்தைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறியதுபடி, தொண்டர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்போம்.” என்றார்.