இன்று தினத்தந்தி நாளிதழின் பவள விழா, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார்.
அப்போது, ‘அனைவருக்கும் வணக்கம், தினத்தந்தி 75-வது ஆண்டு விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தமிழில் பேசி மோடி தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தினத்தந்தியின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எளிய முறையில் செய்திகளை புரியும் வண்ணம் கொடுப்பது தினத்தந்தியின் தனித்துவம். தமிழகம் தவிர பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் தினத்தந்தி பிரசுரம் ஆவது சிறப்பு. எளிமையாக செய்திகளை தருவதால் தினத்தந்தி மக்களிடம் புகழ்பெற்று விளங்குகிறது. தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்தன. பிராந்திய மொழிகளில் வெளியான பத்திரிகைகளைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் அடைந்தனர். அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்பட்ட தந்தி கொடுக்கும் முறை காணாமல் போனது. ஆனால், 75 ஆண்டுகளைக் கடந்து செய்திகளை தந்தியாக தினத்தந்தி கொடுத்து வருகிறது.
75 ஆண்டு கால சாதனையை நிகழ்த்தி காட்டிய தினத்தந்தி நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிகை துறையில் முன்னோடியாக தினத்தந்தி விளங்குகிறது. மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடைக்கோடி வரை கொண்டு சென்றது தினத்தந்தி. கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.” என்று பேசினார்.