பிரதமர் மோடியின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு பிரம்மாண்ட கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே கட்டப்பட உள்ளது. இதை ஜே.பி.சிங் என்பவர் கட்டுகிறார். இவர், உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தில் என்ஜினியராக பணியாற்றி கடந்த 29-ந்தேதிதான் ஓய்வு பெற்றார்.
ஆரம்பத்தில் இருந்தே ஜே.பி.சிங் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவரை மிகவும் கவர்ந்தது. மேலும் மோடி கொண்டு வந்துள்ள வளர்ச்சித் திட்டங்கள் அவரிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
எனவே, இதை நினைவு கூரும் வகையில் மோடிக்கு கோவில் கட்டுவது என முடிவு செய்தார். இந்த கோவில் மீரட்- கர்னல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்படுகிறது. இதற்காக 5 ஏக்கர் நிலத்தை அவர் வாங்கி இருக்கிறார்.
இதில், பிரதமர் மோடியின் 100 அடி பிரமாண்ட சிலை ஒன்றையும் அமைக்க உள்ளனர். கோவில் கட்டுமான பணி வருகிற 23-ந்தேதி பூமி பூஜையுடன் தொடங்குகிறது. 2 ஆண்டுகளில் கோவிலைக் கட்டி முடிக்க ஜே.பி.சிங் திட்டமிட்டுள்ளார்.
கோவில் கட்டுமான பணிக்கு ரூ.10 கோடி வரை செலவாகும் என்று கணக்கிட்டுள்ளனர். இந்த பணத்தின் ஒரு பகுதியை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக திரட்ட உள்ளனர்.
கோவில் கட்டுவது குறித்து ஜே.பி.சிங் கூறும் போது, பிரதமர் மோடி பாரத மாதாவுக்கு செய்து வரும் சேவையால் நான் உந்தப்பட்டு அவருக்கு கோவில் கட்டும் முடிவுக்கு வந்தேன் என்று கூறினார்.