full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

மோகன்லால், கார்த்தி ,ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்

நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்

நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும், இப்படத்தை நான் ஒப்புக் கொள்ளும் முன்பே கார்த்திக் ஜோதிகா இருவரும் இந்த தயாரிப்பாளர் சூரஜ்க்கு ஒப்பந்தமாகி இருந்தார்கள்.

இப்படத்தின் கதை 2 குடும்பத்தின் கதை இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும் ஒரு கதை. அடிப்படையில் குடும்ப கதையாக இருந்தாலும் இதில், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் திகைப்பூட்டும் காட்சிகள் நிறைந்திருக்கும்.

‘தம்பி’ படத்தைப் பார்க்க வருபவர்கள் படத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். எதிர்பாராது நடக்கும்.. காட்சிகளை ரசிப்பார்கள். படம் முழுவதும் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்பதால் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு மாதிரி வித்தியாசத்தைக் கொடுத்துவருகிறேன். இப்படத்திற்கு திரைக்கதை ரின்சில் டிசில்வா எழுதியிருந்தாலும், என்னுடைய உள்ளீடும் இருக்கிறது. நான் கேரளாவைச் சேர்ந்தவன், ரின்சில் டிசில்வா மும்பையிலிருந்து வந்தவர். ஆனால், கதையோ தமிழ் கலாச்சாரத்தைச் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். ஆகையால், மணிகண்டனை (விக்ரம் வேதா படத்திற்காக வசனம் எழுதியவர்) ஈடுபடுத்தியிருக்கிறோம். அவருடைய யோசனைகளையும் சேர்த்திருக்கிறோம். நான்கு பேருடைய மூளையையும் பயன்படுத்தி திரைக்கதை அமைந்திருக்கிறது. இதுதான் இப்படம் நன்றாக வருவதற்கு காரணமாக இருக்கிறது.

அம்மா, அப்பா என்று பல உறவுகள் இப்படத்தில் இருந்தாலும், அக்கா, தம்பி உறவை மையப்படுத்தி இக்கதை அமைந்திருப்பதால் கார்த்திக்கும், ஜோதிகாவிற்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கும். இயற்கையாக ஒரு மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு மாதிரியான மனிதனாக காணப்படுவான். அதுதான் கார்த்தியின் கதாபாத்திரம். மேலும், இதில் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும்.

கார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு நேர்மையாகவும், கடின முயற்சியும் எடுத்து நடிக்கக் கூடிய மனிதர். சண்டைகாட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என எல்லாவற்றையும் திறமையாக செய்யக்கூடியவர் கார்த்தி.

ஜோதிகா திறமையான அனுபவமிக்க நடிகை என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். அவருடைய நடிப்பு பாணியும், தன்னுடைய கதாபாத்திரத்தைக் கையாளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே தன்னுடைய வசனங்களைப் பெற்று கொண்டு பயிற்சி எடுப்பார். கார்த்தி, ஜோதிகா இருவருமே தொழிலில் திறமைவாய்ந்த வல்லுநர்கள். தங்களுடைய கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக எந்தளவுக்கும் கடினமுயற்சி எடுக்கக் கூடியவர்கள்.

சத்யராஜ், அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான அப்பாவாகவும் இல்லாமல், அதேசமயம் தேவையற்ற கதாபாத்திரமாகவும் இல்லாமல் இருக்கும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தில் ஆர்வமாக இருக்கிறார். அவருடைய நடிப்பும் நன்றாக வந்திருக்கிறது.அதேபோல், இப்படத்திலுள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம், ஒரு நோக்கம் மற்றும் தொடர்பு இருக்கும்.
கார்த்தியின் ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் இருக்கும். ஒவ்வொரு நடிகர்களிடமும் உங்களுடைய பாத்திரம் இதுதான் என்று முன்பே கூறிதான் நடிக்க வைத்திருக்கிறோம். ஒரு சிறிய கதாபாத்திரத்தை கூட நீக்கி விட்டு இப்படத்தை எடுக்க முடியாது.

நான் பரிபூரணமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேனா என்பது தெரியாது. ஆனால், திரில்லர் கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக எழுதி, நன்றாக படித்துவிட்டுதான் இயக்கியிருக்கிறேன். முதலில் பெரிய கதையாக இருந்தது. பின்பு அதைத் திருத்தி சிறிது சுருக்கினேன். அதனால், தொடர்பு விட்டுபோனது, பின்பு மீண்டும் சிறு சிறு காட்சியாக கோர்த்து, எங்கள் குழுவுடன் ஆலோசித்து எடுத்தோம். எனக்கு தமிழ் முழுமையாக தெரியாததால், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும், இந்த காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று ஆலோசித்து எடுத்தோம். இப்படம் குழுவாக இணைந்துதான் எடுத்தோம்.

இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா இசையமைத்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘96’. இப்படத்திலும் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் வெவ்வேறு விதமாக நன்றாக வந்திருக்கிறது. இப்படம் திரில்லர் படம் என்பதால், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து சிறப்பாக தன்னுடைய செயல்திறனைக் காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவைப் பற்றி ஆர்.டி.ராஜசேகரிடம் நான் எதுவும் கூறவில்லை. ஆனால், காட்சியமைப்புகள் நன்றாக வந்திருக்கிறது.

திரைப்படத்திற்கு மொழி என்றுமே தடையாக இருந்ததில்லை. கார்த்தி அவருடைய வசனங்களை மலையாளத்திலேயே எழுதிக் கொடுங்கள். என்னுடைய உதவியாளரை வைத்து நான் மொழி மாற்றம் செய்துக் கொள்கிறேன் என்றார். எனது தாய்மொழி மலையாளம் என்பதால் தமிழ் எனக்கு எளிமையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. ஹிந்தி எனக்கு தெரியும். ஆனால், சரளமாக பேச தெரியாது. ஆகையால், ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து நடிக்க வைத்தேன்.

நான் பார்த்த வரையில் மோகன்லால் மாதிரி கார்த்தியும், ஜோதிகாவும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள்.

அனைவரும் திரையரங்கிற்கு வந்து திரைப்படம் காணுங்கள். நல்ல பொழுதுபோக்கான குடும்ப உறவுகளை மையமாக வைத்து சஸ்பென்ஸ் நிறைந்த அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். மேலும், படம் பார்த்துவிட்டு திரும்பும்போது சந்தோஷமாக திரும்புவீர்கள் என்பதை தைரியமாக கூறுவேன்.

 

 

இவ்வாறு ‘தம்பி’ படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறினார்.