full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன – மோகன் ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா.

 
சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன்  3வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் சின்ன பையன், ஆனால் பெரிய திறமையாளர். கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாக தான் இருக்கும், அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார். ஃபகத் பாசில், அரவிந்த்சாமி போன்ற மிகச்சிறந்த நடிகர்களை என் படங்களில் இயக்கியதில் நான் பெருமைப்படுகிறேன். 
 
1989ல் ஒரு தொட்டில் சபதம் படத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறேன். நிறைய பேரிடம் ஆலோசித்து தான்  படங்களை எடுத்து வருகிறேன். 14 உதவி இயக்குனர்கள், 2 ஆராய்ச்சி குழுக்கள், எழுத்தாளர்கள் சுபா ஆகியோருடன் நிறைய வவாதித்து அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டு தான் இரண்டு படங்களையும் உருவாக்கியிருக்கிறேன். இந்த படத்தில் சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். 20 வருடங்களாக என் மனதுக்குள்  இருந்த கேள்விகளை கேட்க, தகுதியை வளர்த்துக் கொண்டேன். தனி ஒருவன் ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தில் மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன். 
 
பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். சினிமா தரும் எண்டர்டெயின்மெண்டை விட நியூஸ் சேனல்கள் தரும் சமூக பிரச்சினைகள், அரசியல் அவலங்கள் போன்ற எண்டர்டெயின்மெண்ட் தான் இப்போது அதிகம். என்னை நம்பி கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. படத்தில் தப்ப யாரும் விரும்பி பண்றதில்ல, ஜெயிக்கறதுக்காக தான் பண்றாங்க, நன்மை ஜெயிக்கும்னு நிரூபிச்சா நன்மையை விரும்பி பண்ணுவாங்கனு ஒரு வசனம் இருக்கு. அது தான் உண்மை.
 
ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. பரீட்சார்த்தமான படங்களின் பட்ஜெட் எப்போதும் 5 கோடிக்குள் தான் இருக்கும். ஆனால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இங்கு நினைத்த படங்களை செய்ய யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. தயாரிப்பாளர், ஹீரோ ஆகியோரை திருப்திப்படுத்த தான் படங்கள் படம் எடுத்து, ஒரு மேடை அமைத்த பிறகு தான் நாம் நினைத்ததை எடுக்க முடியும். வேலைக்காரர்கள், முதலாளித்துவம் பற்றிய குறைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன். கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்கு பிறகு அது நடக்கும். சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாக மட்டும் தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.