மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

Movie Reviews
0
(0)

சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் வனத்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் கோவை சரளா, சதீஷ், சாம்ஸ் உள்ளிட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

போலீஸ் வேலையில் கொஞ்சம்கூட நேர்மையில்லாமல், கொள்ளையடிப்பவர்களிடம் கமிஷன் வாங்குவதும், கொலை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதுமாக இருந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், ஒருநாள் டிவி ரிப்போர்ட்டராக வரும் நாயகி நிக்கி கல்ராணியை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். தனது தங்கையான நிக்கி கல்ராணிக்கு போலீஸ் அதிகாரியைத்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற கொள்கையுடன் இருக்கும் தேவதர்ஷினியையும் சந்தித்து, தனது காதலுக்கு ஓகே வாங்குகிறார்.

இந்நிலையில், அரசியலில் மிகப்பெரிய புள்ளியான அசுதோஸ் ராணாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் ராகவா லாரன்ஸ். அசுதோஸ் ராணா அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்து வருகிறார். இதற்கிடையில், தனது தம்பியான வம்சி கிருஷ்ணாவையும் அரசியலுக்குள் கொண்டுவர நினைக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் வம்சி கிருஷ்ணா போதையில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்கிறார். அதை பார்க்கும் வாய்பேச முடியாத ஒரு பெண், அந்த பெண்ணை காப்பாற்ற நினைக்கிறாள். ஆனால், வம்சி கிருஷ்ணாவோ ஐடி பெண்ணை விட்டுவிட்டு, வாய் பேசமுடியாத அந்த பெண்ணை கற்பழித்து கொன்று விடுகிறார்.

தனது அரசியல் பலத்தால் இந்த வழக்கிலிருந்து தனது தம்பியை வெளியே கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்கிறார் அசுதோஸ் ராணா. ஆனால், சத்யராஜோ அசுதோஸ் ராணாவை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துவிட வேண்டும் நினைக்கிறார். அதற்கு, லாரன்சின் உதவியை நாட நினைக்கும் சத்யராஜுக்கு லாரன்ஸ் தன்னுடைய மகன் என்பது தெரிய வருகிறது.

சிறுவயதில், சத்யராஜ் பணியில் ஈடுபாடு காட்டியதன் விளைவால் தனது மனைவியை இழக்க நேரிடுகிறது. இதை அருகில் இருந்து பார்த்த ராகவா லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறை அதிகாரியாக உருவெடுத்து, தனது அப்பா பணியாற்றிவரும் காவல்துறையை களங்கப்படுத்த வேண்டும் என்ற நினைப்போடு வந்திருப்பது சத்யராஜுக்கு தெரிய வருகிறது.

எனவே, சத்யராஜ், உடனடியாக ராகவா லாரன்ஸை சந்தித்து, அன்று தனக்கு நேர்ந்த நிலைமையை புரிய வைக்கிறார். இதனால், சத்யராஜ் மீதிருந்த தவறான அபிப்ராயம் ராகவா லாரன்ஸ் மனதில் மறைய ஆரம்பிக்கிறது. அதன்பிறகு, இறந்த அந்த பெண்ணிற்கு நீதி தேடி புறப்படுகிறார்.

இறுதியில், அதற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதை ஆக்ஷன் கலந்து விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் கோவை சரளா, சாம்ஸ், சதிஷ் ஆகியோருடன் இணைந்து இவருடைய காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. பிற்பாதிக்கு பிறகு ஆக்ஷனில் களமிறங்கி மாஸ் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நடித்திருக்கிறார். இவர் பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.

நிக்கி கல்ராணி, அழகு பதுமையாக வந்து போயிருக்கிறார். ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஏனோ, அந்த கதாபாத்திரத்தோடு இவரை ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை. ராகவா லாரன்சுடன் சேர்ந்து ஆடும்போதும் கொஞ்சம் திணறியிருக்கிறார். மற்றபடி, அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

கோவை சரளா, சாம்ஸ், சதிஷ் ஆகியோரின் காமெடி படத்தில் ஓரளவுக்குத்தான் எடுபட்டிருக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், கம்பீரமான தோற்றம், சாந்தமான முகம் என ரசிக்க வைக்கிறார். வில்லனாக வரும் அசுதோஸ் ராணா, இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வம்சி கிருஷ்ணா சமீபகாலமாக அவர் நடித்த படங்களிலிருந்து இதில் மாறுபட்டு தெரிகிறார்.

இயக்குனர் சாய் ரமணி, முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். படத்தின் முதல்பாதியில் காவல்துறையையும், பத்திரிகையாளர்களையும் கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் காமெடியாக கொண்டுபோக முயன்றிருக்கிறார். அந்த காமெடியெல்லாம் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆனால், பிற்பாதியில் ஆக்ஷன் என களமிறங்கியதும் படம் விறுவிறுப்படைகிறது. ராகவா லாரன்ஸுக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகளை அமைத்திருப்பது மேலும் சிறப்பு. சண்டை காட்சிகள்தான் படத்தின் விறுவிறுப்புக்கு ரொம்பவும் உதவியிருக்கிறது.

அம்ரீஷ் கணேஷ் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. அறிமுக பாடலில் ராகவா லாரன்ஸ் ஆடும் ஆட்டம்  ரசிகர்கள் ஆட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல், ‘ஹர ஹர மகாதேவி’ பாடலுக்கு ராகவா லாரன்ஸும், ராய் லட்சுமியும் போட்ட குத்தாட்டம் தியேட்டரில் விசிலை பறக்க விட்டிருக்கிறது. பின்னணி இசையிலும் அம்ரீஷ் மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எல்லாம் பளிச்சிடுகிறது. சண்டை காட்சிகளிலும் அனல் தெறிக்கிறது. சாதாரண காட்சியைக்கூட இவரது கேமரா ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *