சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பேருந்து ‘18கே’ ஒன்று இன்று காலை 11 மணி அளவில் அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே வந்து கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் ஏழுமலை ஓட்டினார். கண்டக்டர் இளங்கோவன் மற்றும் பயணிகள் 50 பேர் பேருந்தில் இருந்தனர்.
அப்போது இந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த வழிகாட்டி பெயர் பலகை இரும்பு தூண் மீது மோதியது. இதில் பெயர் பலகை தூண் சாலையின் நடுவில் சரிந்து விழுந்தது. பேருந்தின் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் ஏழுமலைக்கு தோள்பட்டை, கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அண்ணாசாலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான மாநகர பேருந்தை அப்புறப்படுத்தினார்கள்.
சாலையின் நடுவில் விழுந்த பெயர் பலகை இரும்பு தூண் அகற்றப்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த பேருந்து விபத்தால் அண்ணா சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.