full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நபிகளின் பொன்மொழியை கதையாக்கி ஒரு படம்

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “அனிருத்”

தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “அனிருத்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ரத்னவேலு / இசை – மிக்கி ஜே. மேயர், இயக்கம் – ஸ்ரீகாந்த், பாடல்கள் – டாக்டர் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, யுவகிருஷ்ணா, மகேந்திர குலராஜா, எழில் வேந்தன், இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ், தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத், வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா
படம் பற்றி பேசிய A.R.K.ராஜராஜா, “தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிதான் இந்த படத்தின் கதை. முதன் முறையாக இந்த படத்தில் ஏழு பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிறோம்.

யுவகிருஷ்ணா (இவர் வண்ணத்திரை வார இதழின் ஆசிரியர். இந்த படத்தில் இடம் பெரும் “உன்னோடு பயணம் ஓஹோ சலிக்காத சந்தோஷம் ஓஹோ” என்ற பாடலை வெறும் 10 நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார்).

மகேந்திரன் குலராஜா (இவர் பிரான்ஸில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இவர் எழுதிய “வதனம் அழகு வார்த்தை இனிதே” என்ற பாடல் மிகவும் அற்புதமாக இருக்கும்.

டாக்டர் கர்ணா இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் எழுதிய “யாரோ பொண்னொருத்தி சின்ன நெஞ்ச கொத்தி” என்ற பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும்.

திருமலை சோமு. இவர் தினமணி பத்திரிகையின் இணையதள ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பிரபாஸ் பாகுபலி, எவண்டா போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் “ஆடிப்பாடும் நாளும் வருகிறதே” என்ற பாடலை எழுதி இருக்கிறார்.

எழில் வேந்தன். இவர் சூப்பர் போலீஸ், விளையாட்டு ஆரம்பம் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் “புட் யுவர் ஹான்ஸ் அப்” என்ற பப் பாடலை எழுதி இருக்கிறார்.

அம்பிகா குமரன். இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளர் இவர் இந்த படத்தில் “அந்தமான் கண்ணுக்காரி அரிசிமாவு பேச்சுக்காரி” என்ற பாடலை எழுதியிருக்கிறார்.

பாசிகாபுரம் வெங்கடேஷ். இவர் பட்டிமன்ற பேச்சாளர், தமிழ் கவிஞர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பல பரிசுகளை பெற்றவர். படத்தின் முதல் பாடலான “வாழ்க்கை ஒரு நீரோட்டம் வாழ்ந்திருந்தா கொண்டாட்டம்” என்ற பாடலை எழுதி இருக்கிறார்.

படத்தில் எல்லா நினைவுகளும் சந்தோஷமான நினைவுகளாக இருக்கும். அதனால் தான் பல துறைகளை சார்ந்த வல்லுனர்களை பாடல் எழுத வைத்தோம். டப்பிங் படம் என்பதை மீறி ஒரு நேரடி தமிழ் படமாக, ஒரு புது கலராக இருக்கும் இந்த “அனிருத்” என்றார்.