*’குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!*
சினிமா கனவில் இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கிறார்கள். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துவிடுகிறது .அப்படிப்பட்ட வகையில் உருவாகி வரும் படம்தான் ‘குடிமகன்’ இதை விஜய் ஆதித்யன் இயக்கியிருக்கிறார்.
இந்தக் குறும்படத்தை ஓன் ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
இக் குறும்படத்தைப் பார்த்து விட்டு திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர். பாடலாசிரியர் விவேக் 20 நிமிட குறும்படத்தை பார்த்து விட்டு 20 நிமிடங்கள் பேசி வாழ்த்தியிருக்கிறார் .படத்தின் வசனங்களை எல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டி ஊக்கப்படுத்தி இருக்கிறார் . நடிகர் டேனியல் பாலாஜி முதலில் யார் நீங்கள் ? என்று கேட்டிருக்கிறார் .
பிறகு,”கண்டிப்பாக இந்த நல்ல முயற்சிக்கு உதவி செய்வேன் நல்லா இருக்கிறது படம்.” என்று கூறியிருக்கிறார் .
விஜய்மில்டனிடம் படத்தைப் பார்க்கச் சொன்னபோது ,
“நான் விளம்பரப்படுத்தியெல்லாம் பேச மாட்டேன். ஆனால் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஏதாவது உதவி செய்கிறேன். என்றவர், “படத்தைப் பார்த்துவிட்டு நீ யாரிடம் உதவி இயக்குநராக இருந்தாய் ?என்று கேட்டுள்ளார்.நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தில்லை என்று கூறியிருக்கிறார் விஜய் ஆதித்யன். தனக்கு இது முதல் முயற்சி என்றும் சொல்ல, ” உண்மையிலேயே நன்றாக இருக்கிறது,” என்று பாராட்டி இருக்கிறார்.
இப்படிப் பாராட்டிய அனைவருமே படத்தைப் பற்றி ட்விட்டரில் பதிவு செய்து வாழ்த்தி இருக்கிறார்கள். அதனால் வெளியான சில மணி நேரங்களில் இரண்டு லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
“இந்தக் குறும்படத்தை பார்த்த பலரும் திரைப்படம் போலவே இருப்பதாகப் பாராட்டியுள்ளனர். எனது திரைப்படத்திற்கான முயற்சியின் முன்னோட்டம் தான் இது . ஒரு திரைப்படத்திற்கு உழைப்பதைப் போலவே இதற்கு அனைவரும் உழைத்தோம்.இந்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்திருக்கிறது.” என்கிறார் இயக்குநர் விஜய் ஆதித்யன் .
‘குடிமகன்’ குறும்படத்திற்கு ஒளிப்பதிவு -எட்வின் ஜே.ராபர்ட், இசை -தமீம் அன்சாரி ,சவுண்ட் டிசைன் -விக்னேஷ் பாஸ்கரன், எடிட்டிங் – சாய் கிருஷ்ணன் கணேசன் பிரதான வேடம் ஏற்று நடித்து இருப்பவர் சுர்ஜித் குமார்.
முழு ஈடுபாட்டுடன் செய்யும் முயற்சிக்கு என்றும் பலன் உண்டு.குறும்படத்தை இயக்கிய விஜய் ஆதித்யனுக்கு மலையாளத்தில் படம் இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது. லாக்டவுன் நாட்கள் முடிந்தவுடன் தொடங்கவிருக்கிறார்.