full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

நான்கு வேதங்களும் தமிழில் சதுர் வேதமாக : முக்தா சீனிவாசன்

முக்தா பிலிம்ஸ் என்ற நிறுவனமும் முக்தா சீனிவாசன் என்கிற பெயரும் சினிமா பொற்காலமாகத் திகழ்ந்த காலகட்டத்தில் கோலோச்சிய பெயர்கள்.

தரமான படங்களைத் தயாரித்து வழங்கிய இவர்கள் இன்று ஹைடெக் சினிமா சுனாமியால் காணாமல் போய் விட்டார்கள். இவர்களின் ஒவ்வொரு படைப்புமே இன்று வரை நினைவில் நிற்பவை.

சினிமாத்துறையிலிருந்து சற்று ஒதுங்கி இருந்தாலும் முக்தா சீனிவாசன் எழுத்துத் துறையை ஒதுக்கி விடவில்லை. இதுவரை 250 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சுமார் 1000 சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

நம்மிடம் அதுகுறித்து அவர் பேசும் போது, “திரைத்துறைக்குள் காலடி வைத்து 70 ஆண்டுகளைக் கடந்து விட்டேன். 50 படங்களுக்கு மேல் இயக்கி தயாரித்து விட்டேன். அதில் கிடைத்த அதே அளவு மனநிறைவை எழுத்தின் மூலம் பெற்றிருக்கிறேன்.

நாம் கற்றதைப் போல மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்பதால் வீட்டுக்குள்ளேயே ஒரு நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் அதுவும் இலவசமாக. ஆனால் திருப்பித் தந்து விட வேண்டும் என்பது என்னுடைய அன்பு கட்டளை.

இப்போது எனக்கு மனநிறைவைத் தந்திருப்பது சமீபத்தில் நான் எழுதிய புத்தகம் தான். நமக்காக வேற்று மொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களையும் எல்லோருக்கும் புரிகிற மாதிரி சுத்தமான தமிழில் சதுர் வேதம் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இன்றைய தலைமுறையினர் இதையெல்லாம் ஈசியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

எழுத்தை நான் நேசிக்கிறேன். எழுதுவதை நான் நேசிக்கிறேன். வயோதிகம் என்பது பிழையில்லை என்பதை உணர்ந்ததால் எழுதுகிறேன் படிக்கிறேன்.” என்றார் முக்தா வி சீனிவாசன்.