வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றும் நாயகன் ஹரிஷ், உள்ளூர் தாதாவான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றுவதால், அவருடனேயே இருந்து அடியாள் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரி மாணவியான நாயகி யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழுகிறார். இதற்கிடையில், தாதா அர்ஜுனாவின் மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும் பிரிக்க நினைக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஹரிஷ், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். இதனால், தாதாவை விட்டும் விலகும் ஹரிஷ், போலீசுக்கு ஏதாவது தகவல் கொடுத்துவிடுவான் என்று சதித்திட்டம் தீட்டி, அவனை கொலை செய்ய அர்ஜுனனை தூண்டிவிடுகிறார் அவரது மைத்துனர். இவனது சதி வலையில் அவரும் விழுந்துவிட, ஹரிஷை கொல்ல ஆள் அனுப்புகிறார். இந்த தாக்குதலில் ஹரிஷின் தம்பியை ரவுடிகள் குத்தி கொன்றுவிடுகின்றனர்.
இறுதியில், தம்பியை கொன்றவர்களை ஹரிஷ் பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் படம் முழுக்க யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். சண்டைக் காட்சியில் அதிக உழைப்பை கொடுத்து நடித்திருக்கிறார். நாயகி யாமினி நாயகனுடன் காதல், ரொமான்ஸ் செய்ய மட்டுமே பயன்பட்டிருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
தாதாவாக வரும் அர்ஜுனா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கோவிலில் ரவுடிகளிடமிருந்து தப்பிக்கும் காட்சிகள் சிறப்பு. நாயகனின் தாயாக நடித்திருக்கும் சித்தாரா தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்.
தாதா கதையை மையமாக வைத்து அதில் குடும்ப பாச உறவுகளுடன் விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் குமார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. திருப்புமுனை காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
பிரபு சங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
சினிமாவின் பார்வையில் ’முன்னோடி’ நல்ல முயற்சி.