தமிழ் திரையுலகில் முதல்முறை.. வேற லெவல் அனுபவம் கொடுக்கும் மர்மர் டிரெய்லர்
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ரோஹித் பேசும் போது, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்-க்கு இந்த மேடையில் வைத்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் நாங்கள் மேடையேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் பிரபாகரன் தான். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பாருங்கள். நிச்சயம் இந்தப் படம் உங்களை திருப்திப்படுத்தும் என்று நம்புகிறோம். இயக்குநர் தனக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், தெளிவாகவும் இருந்துள்ளார். இதற்காக கடின உழைப்பை வழங்கியிருக்கிறார். இந்தப் படம் எங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்றும் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்றும் நம்புகிறோம்,” என்று கூறினார்.
படத்தின் ஒலி வடிவமைப்பாளர் கெவின் பேசும் போது, “இந்தப் படத்தின் இயக்குநரை முதலில் சந்தித்த போது, படத்தில் இசை இல்லை என்று கூறிவிட்டார். அது பெரிய சவாலாக இருந்தது. எல்லா படங்களும் இசையை சார்ந்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஹாரர் திரைப்படத்தில் இசை இல்லாமல் எப்படி பணியாற்ற போகிறோம் என்று ஆலோசனை செய்தோம். அந்த வகையில், இந்தப் படம் வித்தியாசமாக உருவாகி இருக்கிறது. இவை அனைத்தும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். நன்றி,” என்று கூறினார்.
கலை மற்றும் புரொடக்ஷன் இயக்குநர் ஹாசினி பேசும் போது, “இந்தப் படம் மிகவும் வித்தியாசமான ஒன்று என்பதை டிரெய்லரில் இருந்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஹாரர், திரில்லர், பழிவாங்கல் என பலவிதமான கதைகளை நாம் திரையில் பார்த்திருப்போம். ஆனால் ஃபவுண்ட் ஃபூட்டேஜில் இப்படியொரு கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. இயக்குநரை பற்றி ஒருவிஷயம் மட்டும் சொல்ல வேண்டும். இந்தப் படம் ரிலீசுக்கு பிறகு இயக்குநரை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரியும். அவருக்கு நல்ல பெயரெடுத்துக் கொடுக்கும். அனைவருக்கும் நன்றி,” என்றார்.
மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன் பேசும் போது, ” இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன். ஆனால் நான் அதை அவர்களிடம் கூறவேயில்லை. படம் முடிந்த பிறகு இதை சொன்னதும் எல்லோரும் அலறினார்கள். இந்தப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. என்னைப் போல் மேலும், பல இளைஞர்கள் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பளித்து, ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்தார்.