“உதய சூரியன்” என்பது இவருக்கு மிகவும் பொருத்தமான பெயர். காரணம், கிழக்கே எழுஞாயிறு தன் கதிரொளியை பூமியின் மீது படரவிடத் தொடங்கும் முன்னமே எழுவதை தினசரியாய்க் கொண்டவர். “கலைஞர்” இந்தப் பெயரை புறக்கணித்துவிட்டு தமிழக அரசியலை எழுதுவது என்ன, நினைத்துப் பார்க்கவே முடியாது. கலைஞர் நாவசைத்தால் முத்தமிழ் மணக்கும், சிறக்கும்.
எழுத்திலும் சரி, பேச்சிலும் சரி கலைஞருக்கு நிகர் அவரேதான். தமிழ்ச் சமூகத்தை படிப்பறிவு மிக்கவர்களாகவும், பகுத்தறிவு கொண்டவர்களாகவும் உருவாக்கியதில் பெரும்பங்கு ஆற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர். பெரியாரின் சமூக நீதி கொள்கைகளுக்கு செயல் வடிவம் தந்த உண்மையான தொண்டன். எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஆயிரம் பெருமைகள் கொண்ட மிகப்பெரும் ஆளுமைக்கு, சிறியதொரு பாமாலை வாழ்த்து…
திசையெட்டும் கொட்டும் முரசொலி நீயே!
இசைத்திடும் முத்தமிழ் நாதமும் நீயே!
அசையாத வான்புகழ் மேன்மையும் நீயே!
வசையுண்டு வாழும் அதிசயம் நீயே!
தமிழால் வளர்ந்துத் தமிழால் சிறந்துத்
தமிழை வளர்த்தஎன் செந்தமிழ் ஊற்றே!
சமத்துவம் பேசி சமூகநீதி காக்கக்
சமர்செய்து வாழ்ந்த திராவிட வேந்தே!
ஆயிரம் பேருன்னை ஆயிரம் சொன்னாலும்
நீயின்றி போயிருந்தால் இந்நாடு காவிமயம்!
தூயவனா நீயென்ற பேச்சுக்கள் எல்லாமே
மாயவனே உன்னை வளர்த்தெடுத்த மந்திரங்கள்!
உன்மீது வந்துவிழும் கசையடி எல்லாமே
புன்னகை பூத்தே விரட்டிடும் வித்தைதான்
தொன்னூற்று ஐந்திலும் உன்பெயர் சொல்லியே
மன்றாட வைத்ததே இந்தக் களத்தை!
இங்கே நிலைத்திருக்கும் ஈரோட்டுத் தந்தையும்
இங்கே நிலைத்திருக்கும் காஞ்சிமைந்தன் அண்ணாவும்
முன்னோடி எல்லோரும் நீடித்து நிற்பதே
உன்னாலே தானே! தலைமகனே வாஎழுந்து!