full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

தூரிகை கபிலன் பெயருக்கேற்றாற்போல் நிறைய ஓவியங்களை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசை – இயக்குநர் சேரன்

தூரிகை கபிலன் பெயருக்கேற்றாற்போல் நிறைய ஓவியங்களை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசை – இயக்குநர் சேரன்

நான் பெண் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும் – எழுத்தாளர் தூரிகை கபிலன்

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளும், எழுத்தாளருமான தூரிகை பெண்களுக்கான BeingWomen என்ற Digital Magazine பிரத்யேக டிஜிட்டல் பத்திரிகையைத் தொடங்கினார். இயக்குநர் சேரன், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டார்கள். அதுபற்றி எழுத்தாளர் தூரிகை :
முதலில், இந்த பெண்களுக்கான BeingWomen என்ற Digital Magazine பிரத்யேக டிஜிட்டல் பத்திரிகையை வெளியிட்ட இயக்குநர் சேரன் சார் அவர்களுக்கும், இயக்குநர் பா.ரஞ்சித் சார் அவர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.நான் தனிப்பட்ட முறையில் முன்னணி பத்திரிகை ஒன்றில் எழுதிக் கொண்டிருந்தேன். அதே சமயம் தனிப்பட்ட வலைப்பதிவிற்கும் எழுதிக் கொண்டிருந்தேன்.

பெண்ணாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக தான் பெண்களை மையமாக வைத்து இந்த பத்திரிகையைத் தொடங்கினேன். ஆனால் இது பெண்ணியம் பற்றி பேசுவதற்காக தொடங்கப்பட்டது அல்ல. பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறை பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல. பெண்கள் குறித்த அவர்களுடைய நேர்மறையான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையை தொடங்கினேன்.

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்கள், எந்த எந்த துறையில் சாதனை புரிந்தார்கள்.. அவர்களுடைய திறமைகள் என்னென்ன.. பெண்களுக்காக சிறிய அளவில் என்ன நன்மைகள் செய்கிறார்கள்.. ஒரு பெண் மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப்படும் காரணம் என்ன.. என்பது போன்ற.. முழுக்க முழுக்க பெண்களின் நேர்மறைகளைப் பற்றி மட்டுமே இந்த பத்திரிகையில் எழுதப்படுவதாக திட்டம் போட்டுள்ளேன். சுருக்கமாக.. பெண்களைக் கொண்டாடுவதற்கு தான் இந்த பத்திரிகை.

அதற்காக பெண் உயர்ந்தவள், ஆண் தாழ்ந்தவன் என்று அர்த்தமில்லை. பெண் எப்போதும் ஆணை சாராமல் இருக்க முடியாது. அதேபோல் தான் ஆணும். இது தான் இயற்கையின் நியதியும் கூட. ஆனால், இந்த சமுதாய அமைப்பு எல்லாவற்றையும் பெரிய சிக்கலாக்கி விட்டது.பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை சரி என்று கூறவில்லை. அவற்றைக் கேட்பதற்கு பல அமைப்புகள் இருக்கிறது. இதுபற்றிய விஷயங்கள் அறிந்த பெரியவர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண் தன் குடும்பத்திற்காக தள்ளுவண்டி கடை நடத்துவது தான் சாதனை. அந்த பெண் தான் மற்ற பெண்களுக்கு ஊக்கம். இந்த மாதிரி பெண்களைப் பற்றி தான் எழுதப் போகிறேன்.

அதேபோல், பெண்கள் என்று வரும் பொழுது அழகு சார்ந்த விஷயங்களும் கூடவே வரும். ஒப்பனை செய்து கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால், மாடல் துறையில் இருக்கும் பெண்கள் மற்றும் சினிமாத் துறையில் இருக்கும் பெண்கள் தான் ஒப்பனை செய்துக் கொள்ள முடியும் என்று பெண்கள் நினைப்பது முற்றிலும் தவறு. அதைக் கூறுவதற்கு தான் நாங்கள் எங்கள் பத்திரிகை வெளியிடும் போது அட்டை படத்திற்காகவே பிரத்யேகமாக புகைப்பட படப்பிடிப்பு நடத்தினோம். பெரும்பாலானோர், பெண்களின் நேர்மறைகளை விட எதிர்மறையான விஷயங்கள் பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். உதாரணத்திற்கு மாணவி அனிதாவின் தற்கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை போன்று எதிர்மறையான விஷயங்கள்.இதை உடைப்பதற்காகவும், பெண் சமுதாயத்தை அழகாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களைப் பற்றிய நேர்மறைகளைக் கொத்து கொத்தாக கொடுக்க போகிறேன். இந்த பத்திரிகையை இயக்குநர் சேரன், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டார்கள். அட்டை படத்திற்கு ‘குயின்’ என்று பெயர் சூட்டப்பட்டது. நடிகை விமலா ராமன் நடித்துக் கொடுத்ததிற்க்கு நன்றியெய் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக ஒரு பெண் வெற்றியடைந்தால் அந்த பயணத்தில் சக பெண்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

மேலும், இதில் புதுமையான ஒரு விஷயத்தைக் கொண்டு வரப் போகிறோம். பொதுவாக ஆண்களுக்கு காதல் தோல்வி என்றால் சில அடையாளங்கள் இருக்கும். உதாரணத்திற்கு, தாடி வளர்ப்பார்கள். ஆனால், பெண்களுக்கு அப்படி எந்தவொரு அடையாளங்களும் இருக்காது. அதைக் கண்டுபிடித்து, காதல் தோல்வியை ஒரு பெண் எப்படி சந்திக்கிறாள்? அதிலிருந்து கடந்து எப்படி வெளியே வருகிறாள்? என்பதை சொல்லப் போகிறோம். ஏனென்றால், ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்கிறாள் என்பதற்காக அவள் காதல் தோல்வியை எளிதாக எடுத்துக் கொண்டாள் என்று அர்த்தமில்லை. அதற்காகதான், பெண்களின் காதல் தோல்வியை வெளிக் கொண்டு வரவிருக்கிறோம்.

மேலும், என்ன தான் சமூக மாற்றமடைந்தாலும் பெண்கள் மீதான இனவாதம் என்பது இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பெண், ஆண் கருப்பாக இருக்கிறான் என்பதற்காக அவனை ஒதுக்குவதில்லை. மாறாக, கருப்பாக, உயரமாக இருக்கும் ஆண்களை கொண்டாடுகிறோம். அதே பெண்கள் என்று வரும்போது பல ஆண்கள், நிறத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்கிறார்கள்.

அதேபோல், ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும்போது, கணவரை ஏதோவொரு வகையில் இழந்து தனி ஆளாக அவளது வாழ்வை எப்படி எதிர்கொள்கிறாள்? குடும்பத்தை தனி ஆளாக நின்று வழிநடத்தும் பெண்கள், சமுதாயத்திற்காக சவால்களை சந்திக்கும் பெண்கள், யாருடைய ஆதரவுமில்லாமல் தொழில் முனையும் பெண்கள் என்று அனைத்துப் பெண்களையுமே கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

பெண்களுக்கு சுதந்திரமில்லை என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. பெண்கள் இன்னும் முழுதாக அதை நம்பவில்லை என்றே நான் கூறுவேன். பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கெல்லாம் வயதாகிவிட்டது. அதுக்கு மேலயும் வந்துவிட்டார்கள் என்று கமலஹாசன் அவர்கள் கூறுவார். மேலும், நடை, உடை, பாவனைகளுக்கும் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பார்க்கின்ற பார்வையில் தான் இருக்கிறது. அதேபோல், தெரிந்தே தவறு செய்பவர்களையும் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எழுத்தாளர் தூரிகை கபிலன் கூறினார்.

நடிகை விமலா ராமன் பேசும்போது,

இந்த ‘பியீங் விமன்’ பத்திரிகையில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒளிப்பதிவாளர் மகேஷின் திறமையால் இந்த புகைப்பட படப்பிடிப்பில் நான் ஒரு பேரரசியாக உணர்ந்தேன். இதற்குமுன் இப்படி உணர்ந்ததில்லை. இப்ராஹிம், ராகவன் மற்றும் தூரிகை குழுவினருடன் இருப்பதில் மகிழ்ச்சி. தூரிகையின் ‘பியீங் விமன்’ பத்திரிகை ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் அமையப் போகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய ஊக்கமளிக்கக்கூடிய பல விஷயங்களை வழங்கவிருக்கிறது. அவற்றை ஒவ்வொருவரும் கண்டு கொண்டாடலாம். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது,

பெண்களுக்காக பெண்களைப் பற்றிய நேர்மறை சக்தியை உருவாக்குவதற்கும், பெண்களுடைய சாதனைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடும் இந்த டிஜிட்டல் பத்திரிகை தொடங்கப்பட்டிருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பெண்களுக்காக இவர்கள் செய்யவிருப்பதை பார்க்கும்போது மிகவும் ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் சாதனைப்படைக்கும் ஒவ்வொரு பெண்ணையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். அனைத்துப் பெண்களையும், அவர்களின் திறமைகளையும் காட்சிப்படுத்த வேண்டும் என்றார்.

இயக்குநர் சேரன் பேசும்போது,

இன்று வெளியாகும் ‘பீயிங் விமன்’ டிஜிட்டல் பத்திரிகையை, கபிலனின் மகளாக பிறந்து தூரிகை என்று அழகாக பெயர் சூட்டப்பட்டு, இன்று பெயருக்கேற்றாற்போல் பெண்களின் பல வகையான சிறப்புகளை ‘பீயிங் விமன்’ என்று ஆங்கில டிஜிட்டல் பத்திரிகை மூலம் கொண்டாடவுள்ளார். இந்த பத்திரிகையை வாங்க வேண்டிய அவசியமில்லை; வாசிப்பது மிகவும் எளிது. நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கைகளிலிருக்கும் கைபேசி மூலமாகவே வாசிக்க முடியும். இந்த பத்திரிகை பெண்களுக்கானது. குறிப்பாக, பெண்களின் சிறப்பம்சங்கள், சாதனைகள், அறிவாற்றல், பெண்கள் எந்தெந்த துறையில் பிரபலமாக இருக்கிறார்கள்? அவர்கள் அந்த இடத்தை எப்படி அடைந்தார்கள் என்பதை ஒரு பெண்ணாக இருந்து, தூரிகை கபிலன் நடத்துகிறார். இவர் கவிஞர் கபிலனின் மகள். கவிஞர் வைத்த இந்த பெயரைக் கேட்கும் போதே அழகாகவும், இதுபோன்ற பெயரை வைக்க வேண்டும் என்று ஆசையாகவும் உள்ளது. தூரிகை என்று சொல்லும்போது நிறைய ஓவியங்களைத் தீட்டக் கூடிய வல்லமை வாய்ந்தது. அதேபோல் இந்த தூரிகையும் பத்திரிகை மூலமாக நிறைய ஓவியங்களை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசையும், வாழ்த்துக்களும். இந்த டிஜிட்டல் பத்திரிகையைப் பெண்கள் மட்டும் தான் படிக்க வேண்டும் என்பதில்லை. பெண்களைப் பற்றி புரிந்து கொள்ள ஆண்களும் வாசிக்கலாம். இவ்வாறு இயக்குநர் சேரன் கூறினார்