சூப்பர் டீலக்ஸில் பாதிரியாராக பயணிக்கும் மிஷ்கின்

News

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் `துப்பறிவாளன்’. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பிசியாக இருக்கிறார்.

அதாவது இந்த படத்தில் பாதிரியாராக முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். அதுமட்டுமின்றி தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி, நீலன் சேகரை தவிர்த்து மிஷ்கினும் இப்படத்தின் ஒரு பகுதிக்கு இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, நதியா, காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஜய் சேதுபதியின் ஷில்பா போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

`ஆரண்ய காண்டம்’ படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அநீதிக்கதைகள் என்று முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு சமீபத்தில் `சூப்பர் டீலக்ஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.