சென்னையில் உள்ள மீனவ பகுதியான காசிமேட்டில் அனாதை குழந்தைகளான மைக்கேல் தங்கதுரை, அஃப்சல் ஹமீத், கேப்ரில்லா, வினுஷா தேவி ஆகியோரை சிறு வயதிலிருந்து வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். மைக்கேல் தங்கதுரை மற்றும் அஃப்சல் உள்ளூர் மீன்பிடித் துறைமுகத்தில் பணிபுரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.மறுபுரம் அந்த பகுதியில் வாழும் சில இளைஞர்கள் குழு போதைப் பொருளுக்கு அடிமையாகி சில விஷயங்களை செய்கின்றனர். அந்த குழுவில் ஒருவர் தற்செயலாக குடிபோதையில் துப்பாக்கியால் சுடும்பொழுது ஒரு இழப்பு ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடந்தது? இதன் பின்னர் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.
மைக்கேல் தங்கதுரை வடசென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இவரின் இயல்பான நடிப்பு அம்மக்களின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளது. கேப்ரில்லா கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். எதார்த்த வசன மொழியால் கைத்தட்டல் பெறுகிறார். அஃப்சல் மற்றும் வினுஷா தேவி இருவரும் கதைக்கு நல்ல தேர்வு. வடிவுக்கரசி அவருடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
செல்வாக்கு மிக்கவர்கள் படிநிலையில் உள்ளவர்களை எவ்வாறு பலிகடா ஆக்குகிறார்கள் என்பதை படத்தின் மூலம் சிறப்பாக கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் குமார். சிறிய பட்ஜெட்டில் முடிந்த அளவிற்கு அவரின் உழைப்பு கொடுத்து படத்தை அழகாக வடிவமைத்துள்ளார். சில இடங்களில் சருக்கல்கள் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. திரைக்கதையில் கவனம் செலுத்தி சில காட்சிகளை நீக்கி இருக்கலாம்.வடசென்னை வாழ்வியலை முடிந்த அளவுக்கு சிறப்பாக காட்சிப்படுத்த முயற்சி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் திவ்யாங்க். பால சுப்பிரமணியத்தின் பின்னணி இசை ஓகே, பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்.