full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

“பறவையே எங்கு இருக்கிறாய்?” நா.முத்துக்குமார் ஸ்பெஷல்!!

“போர்க்களத்தில் பிறந்து விட்டோம்.. வந்தவை போனவை வருத்தமில்லை!
காட்டினிலே வாழ்கின்றோம்.. முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை!
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்!
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்குத் துணை என்று விளங்கி விடும்!
பழிபோடும் உலகம் இங்கே.. பலியான உயிர்கள் எங்கே!?
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்!
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்!”

சரியாக 2006-ஆம் ஆண்டு வெளியான “புதுப்பேட்டை” படத்தில் இடம்பெற்றிருந்த “ஒரு நாளில் வாழ்க்கை எங்கும்” என்று தொடங்கும் இந்தப் பாடல் பலருக்கு நினைவிருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலின் இசை, குரல் இரண்டையும் தாண்டி அந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் தாங்கி நின்ற தத்துவம் என்பது எத்தனை தலைமுறைக்கு வேண்டுமானாலும் பொருந்தும்.

ஆம், வாழத்துடிக்கிற.. வெற்றி பெற காத்திருக்கிற ஒவ்வொரு மனிதனுக்குமான நம்பிக்கைத் தத்துவங்களைத் தாங்கி நின்றன அந்தப் பாடலின் வரிகள்.

அதே போல மிகச் சரியாக ஒரு ஆண்டு கழித்து, “கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரமே இல்லை.. கலங்காமலே கண்டம் தாண்டுமே!!” என்று “சத்தம் போடாதே” என்ற படத்திற்காக எழுதினார் மேற்சொன்ன பாடல் வரிகளை எழுதியே அதே பாடலாசிரியர்.

எல்லை மீறாத வார்த்தைகள், கொஞ்சி விளையாடும் அழகு தமிழ், சூழ்நிலைகளை வரிகளில் அடக்கும் அசாத்திய ஆளுமைத் திறன், மடை திறந்த வெள்ளமென பாய்ந்து வந்து விழும் கவித்துவம் தோய்ந்த வரிகள் இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்.. வேறு யாருமல்ல, எழுத்தையே ஆனந்த யாழாக மீட்டத் தெரிந்த மாபெரும் கவிஞன் நா.முத்துக்குமார் தான்.

ஒரு பாடலாசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக முப்பரிமாணங்களிலும் தன் ஆற்றலைத் தமிழுக்கிறைத்த நா.முத்துக்குமாரின் சரித்திரம் நினைக்கையில் சிறியதாகத் தோன்றினாலும், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு சமுத்திரம் போல் மிகப்பெரியது அவரின் இருப்பு. காலத்தால் அழிக்க முடியாத ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் எழுதி இருப்பதனால் மட்டுமல்ல, தமிழ் மொழியினை திரைத்துறையினர் பாடல்களால் சிதைக்காமல் காத்து நின்றவர் அவர். சிலருக்கு இந்த பாராட்டு என்பது மிகையாகத் தோன்றினாலும், நா.முத்துக்குமார் ஆண்டு ஒன்றிற்கு எழுதிய பாடல்களின் எண்ணிக்கையையும், அதில் ஆங்கிலக் கலப்போடும்.. வேற்று மொழிக் கலப்போடும் எழுதி இருக்கிற பாடல்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் அது எவ்வளவு சரியான பாராட்டு எனத் தெரியும்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-வின் எழுச்சிக்கு ஆகப் பெரிய உறுதுணையாக இருந்தவர் நா.முத்துக்குமார் என்றால் அது மிகையாகாது. இதனை யுவன் சங்கர் ராஜாவே ஒப்புக் கொள்வார். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகி வெளிவரும் பாடல்கள் தான் அந்தந்த நேரங்களில் காற்றலைகளை நிரப்பிக் கொண்டிருக்கும். சோகமோ, துள்ளலோ.. காதலோ, காமமோ.. நட்போ, பகையோ.. நா. முத்துக்குமாருக்கு எதுவுமே கைவந்த சூழல் தான். இல்லையென்றால் ஆண்டொன்றிற்கு குறைந்தது 1000 பாடல்களை எழுதித் தள்ள, அதுவும் வெற்றிப் பாடல்களாக எழுதித் தள்ள எந்த பாடலாசிரியனாலாவது முடியுமா?

“தூரத்து மரங்கள் பார்க்குதடி.. தேவதை இவளா கேக்குதடி!
தன்னிலை மறந்து பூக்குதடி.. காற்றினில் வாசம் தூக்குதடி!
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி!
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி!” என்று மகளுக்காக பாடும் பாடலில் இவ்வாறாக வேறெந்த கவிஞனும் யோசித்திருப்பானா? என்பது சந்தேகம் தான்.

காலம் நா.முத்துக்குமார் என்கிற கவிஞனை தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் போது, அவர் தன் மூச்சுக்காற்றை இந்த காற்றுவெளி முழுவதிலும் நிரப்பி வைத்திருந்தார். நம் ஒவ்வொருவரின் செவி வழியே இறங்கி, இதயம் நுழைந்து துடிப்பை அதிகமாக்கும் ஒவ்வொரு பாடலும் அவரின் இருப்பை உறுதி செய்து போகிறது. எனவே தான், நா.முத்துக்குமார் காலத்தை வென்ற கவிஞனாக இந்த பூமிப் பந்தின் மீது நிலைத்திருக்கிறார்.

“பறவையே எங்கு இருக்கிறாய்?” உன் தடயங்களைத் தேடி நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். சந்திக்கும் போது மறக்காமல் ஒரு கவிதை தா, நம் சந்திப்பின் அடையாளமாக!!