நாடு திரைவிமர்சனம்
எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நாடு இந்த படத்தில் நாயகனாக தர்ஷன் நாயகியாகி மகிமா நம்பியார் இவர்களுடன் ஆர்.எஸ்.சிவாஜி ,சிங்கம்புலி இன்ப ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் இந்த படத்துக்கு இசை சத்யா ஒளிப்பதிவு சக்திவேல்
போதிய போக்குவரத்து வசதி இல்லாத கொல்லிமலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு ஒரு அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், அந்த மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள் விரும்புவதில்லை. இதனால், அந்த மருத்துவமனைக்கு அரசு நியமிக்கும் மருத்துவர்கள் ஒரு வாரத்தில் பணி மாறுதல் பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். மருத்துவமனை இருந்தும் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் அந்த கிராமத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. அப்படி ஒரு சூழலில் தான் அந்த ஊரைச் சேர்ந்த நாயகன் தர்ஷனின் தங்கையும் இறந்து போகிறார்.
இதற்கிடையே, ஊர் மக்களின் போராட்டத்தின் பலனாக, அந்த ஊர் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவரான மகிமா நம்பியார் வருகிறார். அவரும் வழக்கம் போல் ஒருவாரம் பணியாற்றிய பிறகு பணி மாறுதல் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடலாம் என்ற மனநிலையோடு தான் வருகிறார். ஆனால், மகிமாவை எப்படியாவது தங்களது ஊரில் நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும் என்று முயற்சிக்கும் ஊர் மக்கள் அதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட, இறுதியில் அவர்கள் நினைத்தது நடந்ததா?, இல்லையா? என்பதே ‘நாடு’ படத்தின் கதை.
பல்வேறு இன்னல்களுக்கு நடுவே வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் முக்கிய பிரச்சனை மருத்துவம். சரியான போக்குவரத்து இல்லாத அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகே கிடைக்க கூடியது என்பதால், சிறிய உடல்நிலை பாதிப்பால் கூட உயிர் சேதத்தை சந்திக்கும் அவர்களுடைய வலிகளை சொல்வதோடு, அதற்கு காரணமான சட்டங்களுக்கு சவுக்கடியையும் கொடுத்திருக்கிறது இந்த ‘நாடு’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் தர்ஷனை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பொருத்தி பார்ப்பதே சற்று பிரமிப்பான விசயம் தான். அதிலும், அந்த கதாபாத்திரத்தில் அவர் மிக சரியாக நடித்திருப்பது என்பது பிரமிப்பே மிரண்டு போகும் சம்பவம். அப்படி ஒரு சிறப்பான சம்பவத்தை தர்ஷன் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். பல இடங்களில் அமைதியாக நடித்திப்பவர், அழுகின்ற காட்சிகளில் பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியாருக்கு கதையோடு பயணிக்கும் வேடம் என்றாலும், பெரிய அளவில் பர்பாமன்ஸ் பண்ணும் வேலை இல்லை. இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை மிக நேர்த்தியாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.
இதோடு படத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்
சி.சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். மலைவாழ் மக்களின் சோகம் மற்றும் கொண்டாட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் கதையோட்டத்திற்கு ஏற்ப பயணித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
சாலை விபத்தை மையமாக வைத்துக்கொண்டு ‘எங்கேயும் எப்போதும்’ என்ற ஒரு அழகான காதல் கதையை கொடுத்தவர், ’மருத்துவர் இல்லாத மருத்துவமனை’ என்பதை மையக்கருவாக வைத்துக்கொண்டு மலைவாழ் மக்களின் துயரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை திரைக்கதையாக்கி, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்.
மொத்தத்தில், எளிய மக்களின் எதிர்பார்ப்பை எளிய முறையில் சொல்லியிருக்கும் இந்த ‘நாடு’ படம் சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல ஒவ்வொரு மருத்துவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.