full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“நாளைய இயக்குநர்” வெற்றியாளர் ராசு ரஞ்சித்தின் “தீதும் நன்றும்”!!

“N H.ஹரி சில்வர் ஸ்கிரீன்” சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் “தீதும் நன்றும்”. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் “தீதும் நன்றும்” என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித். இவர் “நாளைய இயக்குனர்” குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற தமிழ் பொன்மொழியில் இருந்துதான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் தான் என்றாலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

இந்தப்படத்தின் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சந்தீப் ராஜ் ஏற்கனவே தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்தவர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.. இவர் ‘8 தோட்டாக்கள்’ வெற்றிப்படம் மூலமாக ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் மூன்று நண்பர்களில் ஒருவரின் மனைவியாக படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார். அபர்ணாவை ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளத்தில் அவர் நடித்த படத்தை பார்த்தபோது அதில் இன்னொரு கேரக்டரில் நடித்திருந்த லிஜிமோலையும் இந்தப்படத்திற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் ராசு ரஞ்சித்.

கவின்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, “எங்கேயும் எப்போதும்” புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்திற்கு முதுகெலும்பாக அவர் இருப்பார்” என்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். அதுமட்டுமல்ல இவர் அடையாறு திரைப்பட கல்லூரியில் எடிட்டிங் படித்தவர் என்பதால் இந்தப்படத்தின் படத்தொகுப்பையும் தானே கவனித்துள்ளார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

படத்தை பார்த்து வியந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.