full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நாச்சியாரும், பண்பாட்டுக் காவலர்களும் !

நிச்சயமாக ஜோதிகாவுக்கோ, பாலாவுக்கோ முட்டுக் கொடுக்கப் போவதில்லை இந்தக் கட்டுரை.

எழுதக் கூடாதென்று நினைத்து நாச்சியார் விவகாரத்தைத் தவிர்த்தே வந்தேன். லட்சுமி குறும்படம் குறித்த சர்ச்சைகளுக்கு அமைதியாக வேடிக்கைப் பார்த்தது போலவே, நாச்சியார் சலசலப்புகளையும் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கடந்து விடலாம் என்பதில் மண்ணள்ளிப் போட்டது ஒரு வீடியோ.

அந்த வீடியோவில், “வேறு யாரோ தெருவில் போறவங்களோ, யாராவது துணை நடிகைகளோ, ஆண் நடிகர்களோ அந்த சர்ச்சைக்கு வித்திட்ட வார்த்தையை (இனி அந்த வார்த்தையை “டேஷ்” என்று குறிப்பிடுகிறேன்) பேசியிருந்தால் பிரச்சனை ஆகி இருக்காது. ஒரு பெரிய நடிகரின் மனைவியாகவும், ஒரு உயர்ந்த குடும்பத்தின் மருமகளாகவும் இருந்துகொண்டு ஜோதிகா அந்த வார்த்தையை பேசியதே மிகப் பெரிய குற்றமாகி விட்டது. அதனால் தான் அது அருவெறுப்பாக மாறியது” என்று மாய்ந்து மாய்ந்து கருத்துக் கூறிக்கொண்டிருந்தார்கள்.

பொதுவாக ஐந்தறிவு விலங்கினங்கள் தங்களின் எதிர்பாலினத்தவருக்குத் தரும் மரியாதையைக் கூட, ஆறறிவு மனிதன் தருவதில்லை. அதிலும் இந்திய சமூகத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று இலக்கணம் எழுதி வைத்து, அது எந்தக் காரணத்தைக் கொண்டும் அழிந்துவிடாமல் அடைகாத்து வருகிறது நம் ஆண் வர்க்கம். இங்கு கலாச்சாரம், பண்பாடு எல்லாமே பெண்களைச் சுற்றியும், பெண்களின் ஒழுக்கத்தைச் சுற்றியும் பின்னப்பட்டிருப்பதெல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம் என்பதை பெண்களே உணராத வகையில் வெற்றிகரமாக நிறுவி வைத்திருப்பவர்கள் நாம். இன்று அத்தனையையும் மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெண் சுதந்திரம் பேசப்படும் பொழுது, அதை சகிக்க முடியாமல் பெண் சுதந்திரத்திற்கான எல்லைகள் என்று அழுகிப்போன பழைய குப்பைகளையே நவீனப்படுத்தி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட மனப்பிறழ்வு கொண்ட சமூகத்திடம் இருந்து ஜோதிகா “டேஷ்” என்ற வார்த்தையைப் பேசியதற்கு நாம் எந்த மாதிரியான எதிர்வினைகளை எதிர்பார்த்து விட முடியும்?. எதிர்பார்த்தது போலவே உளுத்துப்போன தங்களது பழமைகளை கூட்டம் கூட்டிக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பாவம், அவர்களுக்கெல்லாம் “கெட்ட வார்த்தை யார் வாயிலிருந்து வந்தாலும் கெட்ட வார்த்தை தான்” என்ற அடிப்படை அறிவு கூட இல்லையே என்பது மிகப் பெரிய வேதனை.

இங்கு பேசப்படுகிற எல்லா கெட்ட வார்த்தைகளுமே பெண்களின் உடல் குறித்தோ, பெண்களின் நடத்தை குறித்தோ மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிலும் இங்கு முக்கால்வாசி கெட்ட வார்த்தைகளுக்கு ஆண்பால் சொல்லே இல்லை. ஒரு ஆணை ஏசுவதற்கு எதற்காக அவனது தாய் குறித்தும், சகோதரி குறித்தும் விமர்சிக்கும் படியான வார்த்தைகள் இங்கே ஏன் பயன்படுத்தப்படுகின்றன? என்பதான குறைந்த பட்ச பச்சாதாபமோ, கேள்வியோ இவர்களுக்கு ஒரு நாளும் வருவதில்லை. வரப்போவதுமில்லை.

அதே வார்த்தை ஒரு பெண்ணின் வாயிலிருந்து ( நல்ல குடும்பத்துப் பெண், உயர்ந்த குடும்பத்துப் பெண் என்ற நிபந்தனைக்குட்பட்டது) வரும்போது இவர்கள் பண்பாடு, கலாச்சாரம் பாழ்பட்டதாய் வரிந்து கட்டிக் கொண்டு பொங்கித் தள்ளுகிறார்கள். இவர்களுக்கு ஜோதிகா அந்த வார்த்தையை பேசியதற்காக எந்த விதமான வருத்தமோ, கோபமோ இல்லை. மாறாக அவர் சூர்யா என்ற நடிகரின் மனைவியாகவும், சிவக்குமாரின் மருமகளாகவும் இருந்து கொண்டு எப்படி இதுபோல் பேசலாம் என்ற “அடிப்படையிலேயே” கேள்விகளை முன் வைக்கிறார்கள். முறையாக அன்னாரெல்லாம் எப்படி இந்த சமூகம் இன்னமும் பெண்களை இழிவுபடுத்தியே கெட்ட வார்த்தைகளை பேசலாம்? என்ற கேள்வியை முன் வைத்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.

ஜோதிகா பேசிய அந்த “டேஷ்” என்பது யாரை நோக்கி யாரால் கூறப்பட்டு வந்தது என்ற வரலாற்றறிவு என்பது இங்கே விவாதிக்கும் பலருக்கும் இல்லை. அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் இதற்கான எதிர்வினைகள் வேறு வடிவம் பெற்று நியாயமானதாக மாறியிருக்கும். அந்த வார்த்தையில் இருக்கிற அரசியல் தெரியாமல் தானே நாம் இன்னும் அதை நமக்குள்ளேயே பிரயோகப் படுத்திக் கொண்டிருக்கிறோம்?இதுபோல ஒரு பிரச்சினையினை மேம்போக்காக அணுகி, கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் வாந்தி எடுத்து வைக்காமல், அமைதியாக கடந்து போனால் அவர்களுக்கும் நல்லது, இந்த சமூகத்திற்கும் நல்லது. அப்படி கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயமும், நிர்பந்தமும் இருப்பின் பிரச்சனைகளின் தன்மையையும், காரண காரியங்களையும், நியாயங்களையும்

தெளிவான புரிதலோடும் உண்மையான அக்கறையோடும் ஆராய்ந்து பேசுங்கள் நாயமாரே! 

– பா பிரேம்