ஹாரர் படத்தில் நமீதா

News

தென்னிந்திய திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் வெள்ளித்திரையில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடிக்கும் படத்திற்கு ‘மியா’ என்று பெயர் வைத்துள்ளனர். நமீதாவுடன் இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘இ’ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரித்திருக்கும் இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர்.

ஹாரர் மூவியான இப்படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ‘மியா’ மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் – மனைவி பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் மியா படத்தின் கதை. கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளேன்.

இப்படத்தின் பெரும்பாலன காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’ என்றார். மியா திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இயக்குனர்களாக களமிறங்கும் ஆர். எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா, மலையாளத்தில் ‘ஸ்பீடு’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர்களாவர். ‘ஸ்பீடு’ படம் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.