வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதும் நரை

News
0
(0)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”.
 
இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.
 
நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ‘அம்மா கிரியேசன்ஸ்’ சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டனர். 
 
 
அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேசிய ஆர்.கே.சுரேஷ், “நான் தயாரிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி 7 வருடங்கள் ஆகியிருக்கிறது. அன்று நான் தயாரித்த ‘6 மெழுகுவர்த்திகள்’ ஜெயிக்காமல் போயிருந்தால் நான் இங்கிருந்திருப்பேனா? என்பது சந்தேகம் தான். எனது பெரியப்பா ‘சங்கிலி முருகன்’ இப்படத்தில் நடித்திருக்கிறார். அதுவே இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இப்போதிருக்கிற சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது சாதாரணமானது இல்லை. அந்த வகையில் இப்படி ஒரு வித்தியாசமான படத்தை துணிந்து தயாரித்திருக்கிற தயாரிப்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள். “நரை” திரைப்படம் ஜெயிக்க வேண்டும், இயக்குநர் விவி-க்கு எனது வாழ்த்துகள்” என்று பேசினார்.
 
‘சங்கிலி’முருகன் பேசிய போது, “அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை. சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் காலகட்டத்தில் “நரை” போன்ற படம் வருவது நல்ல விசயம் தான். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும் போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார். ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ? என்று குழம்பியிருக்கிறேன் நிறைய முறை. இப்படத்தில் சொல்ல வேண்டியது இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக். நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்-திற்கும் இயக்குநர் விவி-க்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். “நரை” சந்தேகமேயின்றி வெற்றிபெறும்” என்று பேசினார்
 
“அம்மா கிரியேசன்ஸ்” சிவா பேசிய போது, “எல்லோரும் பேசும்போது ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பயன்படுத்திய லைட்டிங் டெக்னிக்கைப் பற்றி பாராட்டி சொன்னார்கள். அது போல புதுமையான, சிக்கனமான முயற்சிகள் தான் தற்போதைய தமிழ் சினிமாவிற்குத் தேவை. இப்போது நான் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குநரும் இப்படியான நிறைய புதுமையான விசயங்களால் செலவுகளைக் குறைக்க முடியும் என சொல்லி இருக்கிறார். அது தான் ஒரு தயாரிப்பாளரை காப்பாற்றும். ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு பெருமையைத் தரும் வகையிலான படங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, சிறுமைப்படுத்தும் படங்களை விமர்சனத்திற்கு கூட எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். நல்ல கதையம்சத்துடன் வந்து வெற்றி பெற்ற தீரன், அறம், அருவி போன்ற தரமான படங்களின் வரிசையில் நரையும் இடம்பெறும் என நம்புகிறேன். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்,” என்று பேசினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.