நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜிஎஸ்டி வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, “ஜி.எஸ்.டி. வரி அமலுக்குப் பின்பு நாட்டின் வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் வெளிப்படைத் தன்மைக்கு வழி வகுத்துள்ளது. இதை கணக்கில் கொள்ளாமல் உலக வங்கியானது இந்தியாவின் வர்த்தக வளர்ச்சி 100-வது இடத்துக்கு பின் தங்கி உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 3 ஆண்டு குறுகிய காலத்தில் நாம் 42-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம். ஏற்கனவே உலக வங்கியுடன் இணைந்து பணியாற்றியவர்கள்தான் இந்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள். இன்னும் வர்த்தக வளர்ச்சி விகிதம் 30-வது இடத்துக்கு எடுத்துச் செல்வோம். அதற்காக இன்னும் சிறப்பாக செயல்படுவோம்.
125 கோடி மக்களுக்காக ஒரு வாழ்க்கை ஒரு குறிக்கோள் என்ற நோக்கத்துடன் இந்த நாட்டில் நான் மாற்றங்கள் கொண்டு வருவேன். இதுவே எனது லட்சியம். வியாபாரிகளும், வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரி தொடர்பான பிரச்சினைகளைக் கிளப்பி இருக்கிறார்கள். இதில் சாதகமானவை ஏற்றுக் கொள்ளப்படும். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.” என்றார்.